இரட்டை இலை சின்னம் யாருக்கு? அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்


இரட்டை இலை சின்னம் யாருக்கு? அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 16 Sept 2017 5:30 AM IST (Updated: 16 Sept 2017 4:11 AM IST)
t-max-icont-min-icon

இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31-ந் தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-

அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டதால் 45 ஆண்டுகளாக அக்கட்சியின் அதிகாரபூர்வ சின்னமாக இருந்து வந்த இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியுள்ளது.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளில் பிளவு ஏற்பட்டபோது அதிக பெரும்பான்மை உள்ள பிரிவுக்கு கட்சியின் அதிகாரபூர்வ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. எனவே ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி.தினகரன் ஆகியோர் அணிகளில் உள்ள அ.தி.மு.க.வின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் கூட்டுக்கூட்டத்தை கூட்டி நிர்வாகிகள் தேர்தல் நடத்தி வெற்றி பெறும் அணியிடம் சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தாமதம்

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அ.தி.மு.க. அணிகள் சார்பில் வக்கீல்கள் ஆஜரானார்கள்.

ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆஜரான வக்கீல், “இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்குவது என்பதை அறிவிக்க கெடு விதிக்க வேண்டும்” என்றார்.

தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வக்கீல், “இரட்டை இலை சின்னத்தை பெற அ.தி.மு.க. அணிகள் சார்பில் மாறி மாறி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் சின்னத்தை யாரிடம் ஒப்படைப்பது என்று முடிவெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

உள்ளாட்சி தேர்தல்

விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் எந்த பிரிவுக்கு, அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னத்தை ஒதுக்கீடு செய்வது என்பதில் தேர்தல் ஆணையத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் கடந்த ஜனவரி 16-ந் தேதி மனு கொடுத்துள்ளன. கூடுதல் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் மேலும் அவகாசம் வழங்கி தேர்தல் கமிஷன் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி உத்தரவிட்டது. இருந்தபோதும் இதுவரை 2 அணிகளும் ஆவணங்களை தாக்கல் செய்யாமல் இழுத்தடித்து வருகின்றன.

தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் 17-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் சின்னம் ஒதுக்கீடு செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டால் கட்சிகளின் அரசியல் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்படும். தேர்தல் ஆணையத்துக்கு வரும் மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

விரைவாக முடிவெடுக்க வேண்டும்

உத்தரபிரதேசத்தில் நடந்த பொதுத்தேர்தலின்போது சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டது. அந்த சமயத்தில் கட்சி சின்னம் ஒதுக்கீடு தொடர்பான மனு மீது தேர்தல் ஆணையம் விரைவாக முடிவு எடுத்தது. இந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்தை கேட்டு உரிமை கோரிய மனுக்கள் மீது முடிவெடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு அ.தி.மு.க.வின் இரு அணிகள் தான் காரணம் என்பது உண்மை. அதே நேரத்தில் இதை ஒரு காரணமாக வைத்து சின்னம் ஒதுக்கீட்டில் முடிவு எடுப்பதில் தாமதம் செய்யக்கூடாது. இரு அணிகளும் தங்கள் ஆவணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்வதற்கு தேர்தல் ஆணையம் கெடு விதித்து விரைவில் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன்பு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும். எனவே அ.தி.மு.க.வின் இரு அணிகளும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, சட்டப்படியும், தகுதி அடிப்படையிலும் விசாரணை நடத்தி வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் தேர்தல் ஆணையம் இறுதி முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

Next Story