அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 16 Sept 2017 6:00 AM IST (Updated: 16 Sept 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு நீதிபதிகள் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்பினார்கள்.

மதுரை, 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

தடை விதிக்க கோரிக்கை

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வக்கீல் சேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கங்கள் (ஜாக்டோ, ஜியோ) தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 7.9.2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசு பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களின் எதிர்காலம் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது மனுவில் கூறி இருந்தார்.

இடைக்கால தடை

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்- ஆசிரியர்கள் கூட்டமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இடைக்கால தடை விதித்து, கடந்த 7-ந்தேதி உத்தரவிட்டது.

ஆனாலும் கோர்ட்டு உத்தரவை மீறி ஏராளமான அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தனர்.

இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகளின் கவனத்துக்கு மனுதாரர் தரப்பினர் கொண்டு சென்றனர். அரசு ஊழியர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதிகள் கேள்வி

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் 15-ந்தேதி (அதாவது நேற்று) நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

அதன்பேரில் ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் சுப்பிரமணியன், தாஸ், மோசஸ் ஆகியோர் நேற்று காலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜர் ஆனார் கள். இதையடுத்து, நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமி நாதன் ஆகியோர் முன்பு நேற்று காலை 11 மணி அளவில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகளிடம் “நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், போராட்டத்தை கைவிட்டுவிட்டு வேலைக்கு திரும்பாதது ஏன்? உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாமே? நீதிமன்றங்களையும், நீதிபதிகளையும் கேலிக்கூத்தாக்குகிறீர்களா?” என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அத்துடன், “எந்தவிதமான நிபந்தனையும் இன்றி உடனடியாக நீங்கள் பணிக்கு திரும்ப வேண்டும். அரசு பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாதபட்சத்தில், கோர்ட்டை அணுகியிருக்கலாமே?” என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை

அதற்கு ஜாக்டோ, ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் கூறியதாவது:-

கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது.

ஆனால் அந்த கமிட்டியின் அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. கடைசியாக வேலைநிறுத்தத்துக்கு முன்பு மூத்த அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக நோட்டீஸ் அனுப்பி, அதன்பின்னர் தான் போராட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வாறு வக்கீல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அரசு வக்கீல் வாதாடுகையில், “அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சில அரசு ஊழியர் சங்கங்கள் ஒத்துழைக்க மறுப்பதால் இழுபறி ஏற்படுகிறது” என்றார்.

எச்சரிக்கை

பின்னர் நீதிபதிகள், “வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவை தெரிவியுங்கள்” என்று கூறி, வழக்கு விசாரணையை சற்று நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர் 15 நிமிடம் கழித்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து பொதுக்குழுவை கூட்டி தான் முடிவு செய்ய முடியும்” என்று ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆனால் அதை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

“இந்த நீதிமன்றம் போராட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதை நீங்கள் மதிக்கவில்லை. நீதிபதிகள் உத்தரவிட்ட பின்பும் பொதுக்குழுவை கூட்டி தான் முடிவெடுப்போம் என்பது ஏற்கத்தக்கதல்ல. இன்னும் ஒரு மணி நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுபவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட முடியும்” என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், “நீங்கள் உங்கள் கோரிக்கை குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிடுவோம். உடனடியாக முடிவை கூறுங்கள்” என்று கூறி மீண்டும் விசாரணையை சற்று நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.

தற்காலிகமாக வாபஸ்

இதனையடுத்து ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள், “போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்” என்று தெரிவித்தனர்.

அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

“வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று (அதாவது நேற்று) மதியம் 2 மணிக்குள் அவரவர் பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தம் அடிப்படை உரிமை ஆகாது என்று பல்வேறு வழக்கு விசாரணையின் போது கோர்ட்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் ஒரு கோரிக்கைக்காக ஒட்டு மொத்தமாக வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இவர்களின் போராட்டத்தால் அரசு எந்திரம் முடக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வுகள் பாதிக் கப் பட்டு உள்ளன. அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு பதிலாக மாற்று வழிகளை கையாண்டு இருக்கலாம்.

கலெக்டர் அலுவலகங்கள், அரசு அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களால், வறட்சி, விவசாயம் பாதிப்பு போன்ற பிரச்சினைகளுக்காக பொதுமக்கள் அரசு அலுவலகங்களை நாட முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

தலைமைச் செயலாளர் ஆஜராக உத்தரவு

அரசு அலுவலகங்களை அவர்கள் தனியார் நிலம் போல பயன்படுத்த முடியாது. அரசியலமைப்பையும், அடிப்படை உரிமையையும் நிறைவேற்ற நீதிமன்றம் ஒருபோதும் தயங்காது.

எனவே அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வருகிற 21-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும்.”

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

பணிக்கு திரும்பினர்

ஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, நேற்று பிற்பகல் முதல் பணிக்கு திரும்பினார்கள்.

இதனால், கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. 

Next Story