கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு: 300 பக்க குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் 97 பேர் சாட்சிகளாக சேர்ப்பு
கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிகையை கோத்தகிரி கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்தனர். அதில் 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
கோத்தகிரி,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ளது. இங்கு கடந்த ஏப்ரல் 24-ந் தேதி நுழைந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர் விலை உயர்ந்த பொருட்களையும், முக்கிய ஆவணங்களையும் கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக கேரள கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ் சாமி, திபு, சதீசன், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், உதயகுமார், சயான், வயநாடு மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே மோசடி வழக்கில் கைதாகி ஜம்ஷீர்அலி, ஜித்தின்ராய் ஆகிய 2 பேரும் கேரள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கோடநாடு வழக்கில் இவர்கள் 2 பேருக்கும் தொடர்பு இருப்பதை தொடர்ந்து அந்த வழக்கிலும் போலீசார் வழக்குபதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
300 பக்க குற்றப்பத்திரிகை
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட டிரைவர் கனகராஜ் இறந்து விட்ட நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் கோத்தகிரி போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்த பணி நிறைவடைந்ததை அடுத்து கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்காக கோத்தகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு நேற்று காலை வந்தார். பின்னர் அவர் மாஜிஸ்திரேட்டு ஸ்ரீதர் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் கூறுகையில், ‘10 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 4½ மாதங்களாக நடந்த புலன் விசாரணையில் 69 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 97 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது’ என்று கூறினார்.
Related Tags :
Next Story