சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார் ‘அரசியல் வெற்றிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது’ ரஜினிகாந்த்


சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார் ‘அரசியல் வெற்றிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது’  ரஜினிகாந்த்
x
தினத்தந்தி 2 Oct 2017 5:45 AM IST (Updated: 2 Oct 2017 9:11 AM IST)
t-max-icont-min-icon

சிவாஜிகணேசன் மணிமண்டபத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த், “அரசியல் வெற்றிக்கு சினிமா புகழ் மட்டும் போதாது” என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

‘நடிகர் திலகம்’, ‘திரை உலகின் இமயம்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்ட சிவாஜிகணேசன் கடந்த 2001-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி மரணம் அடைந்தார்.

சிவாஜி கணேசனின் கலை சேவையை கவுரவிக்கும் விதமாக சென்னை மெரினா கடற்கரை சாலையில் 8 அடி உயரத்தில் அவரது முழு உருவ வெண்கல சிலை கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நிறுவப்பட்டது.

2015-ம் ஆண்டு ஆகஸ்டு 26-ந் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, ‘அடையார் சத்யா ஸ்டுடியோ அருகே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி, ரூ.2 கோடியே 80 லட்சம் செலவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மணிமண்டபம் கட்டும் பணி தொடங்கியது. அந்த பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் இருந்த சிவாஜி கணேசன் சிலை மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது. சிவாஜிகணேசனின் பிறந்தநாளான நேற்று, அவருடைய மணிமண்டப திறப்பு விழா நடந்தது.

தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தகவல் மற்றும் செய்தி தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

மணிமண்டப திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் கலந்துகொண்டு மேடையில் அருகருகே அமர்ந்து இருந்தனர்.

விழாவில், “அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டும் போதாது” என்று ரஜினிகாந்த் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

“ஓ.பன்னீர்செல்வம் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அது நிறைய தடவை நிரூபணமும் ஆகி இருக்கிறது. காலா காலத்துக்கும் தலைநிமிர்ந்து நிற்கப்போகிற இந்த மணிமண்டபத்தை திறக்கிற பாக்கியம் அவருக்கு கிடைத்து இருக்கிறது.

சிவாஜி கணேசன் நடிப்பில் சக்கரவர்த்தியாக திகழ்ந்தவர். இப்படித்தான் நடிக்க வேண்டும்; இப்படித்தான் வசனம் பேச வேண்டும்; இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்த கால கட்டத்தில் நடிப்பில், வசன உச்சரிப்பில், நடையில், பாவனையில் ஒரு புரட்சியை உண்டாக்கினார்.

தமிழ் மக்களை மட்டும் அவர் ரசிக்க வைக்கவில்லை. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒவ்வொரு கதாநாயகனையும் இந்த மாதிரி ஒரு நடிகனை இனிமேல் பார்க்க முடியாது, அவரைப்போல் நடிக்கவும் முடியாது என்று சொல்ல வைத்தவர். அங்கீகரிக்கப்பட்ட ஒரு மகா நடிகன் சிவாஜி. அதற்காக அவருக்கு இந்த மணிமண்டபம் எழுப்பினோமா? சிலை வைத்தார்களா?

ஒரு நடிகனாக மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு மணிமண்டபம் கட்டி இருக்க மாட்டார்கள். எவ்வளவு பெரிய நடிகனாக இருந்தாலும் சரி. ஏன் அவருக்கு மணிமண்டபம்? ஏன் அவருக்கு சிலை? என்று சொன்னால் அவர் நடிப்புத்துறையில் இருந்து, நடிப்பு ஆற்றலில் இருந்து வரலாறு படைத்த சுதந்திர போராட்ட வீரர்களையும், சுதந்திரத்துக்கு பாடுபட்ட சரித்திர நாயகர்களையும், அவர்களுடையை வரலாற்றையும் படமாக்கி அவர் கள் கதையை தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்கள் வரைக்கும் சொன்னார்.

சிவபுராணம், கந்தபுராணம் மாதிரி படங்களை மக்களிடத்தில் சேர்த்தார். அதனால்தான் அவருக்கு இந்த மணிமண்டபம். கடவுள் மறுப்பு கொள்கை உச்சத்தில் இருந்தபோது நெற்றியில் விபூதி போட்டு தன்னுடைய நடிப்பு ஆற்றலை மட்டும் நம்பி உச்சத்தை தொட்டவர் சிவாஜி கணேசன். அவருக்கு இந்த மணிமண்டபம்.

நாம் செத்த பிறகு மண்ணில் மண்ணாக போகிறவர்களுடன் பழகுகிறோம். செத்த பிறகு சாம்பலாக போகிறவர்களுடன் பழகுகிறோம். ஆனால் செத்த பிறகு சிலையாக போகிறவன் கிட்ட பழகுறது ரொம்ப அபூர்வம். பல கோடியில் ஒருத்தர்தான் செத்த பிறகு சிலையாக போவார்கள். அவரவர் வீட்டில் சிலை வைத்துக்கொள்ளலாம். அது இல்லை. மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசாங் கத்தால் வைக்கப்பட்டது இந்த சிலை.

அப்படிப்பட்ட ஒரு மகானோடு நாம் பழகி இருக்கிறோம் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரிய பெருமை. இது அரசியல், சினிமா துறை இரண்டும் சேர்ந்து கலந்த ஒரு விழா. சிவாஜி நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் வந்து அவரது ஜூனியர்களுக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்து போய் இருக்கிறார்.

சினிமா புகழ் மட்டும் போதாது

அவர் அரசியலுக்கு வந்து தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் நின்று அவருடைய தொகுதியிலேயே தோற்றுப்போய் விட்டார். அது அவருக்கு நடந்த அவமானம் அல்ல. அந்த தொகுதி மக்களுக்கு நடந்த அவமானம். இதில் ஒரு செய்தியை சொல்லி விட்டு போய் இருக்கிறார். அதில் இருந்து ஒரு செய்தியை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

அரசியலில் வந்து வெற்றியடைய வேண்டும் என்று சொன்னால் சினிமா பெயர், புகழ், செல்வாக்கு மட்டும் இருந்தால் போதாது. அதுக்கு மேல் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். அது மக்களுக்கு மட்டும்தான் தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. கமல்ஹாசனுக்கு அது தெரியும் என்று நினைக்கிறேன்.

தெரிந்து இருந்தாலும் அதை எனக்கு சொல்ல மாட்டார். ஒருவேளை இரண்டு மாதத்துக்கு முன்பு கேட்டு இருந்தால் சொல்லி இருப்பாரோ என்னவோ. இல்லண்ணே... நீங்க திரையுலக மூத்த அண்ணன். நீங்க என்கிட்ட சொல்லணும். சொல்லுங்க. நான் உங்க தம்பி என்று சொன்னால், நீ என்கூட வா சொல்றேன்... அப்படி என்று சொல்கிறார்.

இது ஒரு அருமையான விழா. இந்த மணிமண்டபத்தை கட்டிக்கொடுத்த அமரர் புரட்சித்தலைவிக்கு திரையுலகம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த சிலையை உருவாக்க காரணமான டாக்டர் கலைஞருக்கும் மனமார்ந்த நன்றி.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Next Story