லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு தொடங்கியது


லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மாநாடு தொடங்கியது
x
தினத்தந்தி 2 Oct 2017 3:15 AM IST (Updated: 2 Oct 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க மாநாடு நேற்று தொடங்கியது.

சென்னை,

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்க மாநாடு நேற்று தொடங்கியது. சினிமா உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்கள்- மாணவிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் லயோலா கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்க மாநாடு நேற்று தொடங்கியது.

இந்தகல்லூரியில் முன்பு படித்த மாணவர்கள்-மாணவிகள் கூடினார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படுத்தி கொண்டனர். முன்னாள் மாணவ-மாணவிகள் அனைவரும் மொத்தத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

மாநாட்டில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரும், வி.ஐ.டி.பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விஸ்வநாதன் பேசுகையில்; “லயோலா கல்லூரியில் படிக்க மிகவும் கொடுத்து வைத்திருக்கவேண்டும். நான் இந்த கல்லூரியில் படித்தபோது இருந்த பேராசிரியர்களை நினைவு கூர்கிறேன். இந்த கல்லூரியில் எந்த துறையில் படித்தாலும் அவர்கள் வெற்றி பெற்று திகழ்கிறார்கள்” என்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கலந்துகொண்டார்.

விழாவில் லயோலா கல்லூரியில் ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்து இப்போது சினிமா உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் பல முன்னாள் மாணவர்கள்-மாணவிகளுக்கு விருது வழங்கப்பட்டது. சினிமா டைரக்டர்கள் கிருத்திகா உதயநிதி, மிஷ்கின், வெற்றிமாறன், நடிகர் டேனியல், மற்றும் ஜி.வெங்கட்ராம், சத்யஜித், நிதின் பரத் உள்பட பலருக்கு விருது வழங்கப்பட்டது.

ஊடகத்துறையினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. “தண்ணீரை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் லயோலா கல்லூரியின் செயலாளர் ச.லாசர் அடிகளார், ரெக்டர் ஜெயபதி பிரான்சிஸ் அடிகளார், முதல்வர் ம.ஆரோக்கியசாமி அடிகளார், முன்னாள் மாணவர்கள் சங்க இயக்குனர் தாமஸ் அடிகளார், செயலாளர் பாலமுருகன், கல்லூரியின் இணை முதல்வர் பாத்திமா வசந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று (திங்கட்கிழமை) மாநாட்டின் 2-வது நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. காலை 10-30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. மாலை 5-30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர்கள், முன்னாள் ரெக்டர்கள், முன்னாள் செயலாளர்கள், சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

Next Story