தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை


தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 2 Oct 2017 1:55 AM IST (Updated: 2 Oct 2017 1:55 AM IST)
t-max-icont-min-icon

தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதால் மின்சார வாரியத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வடசென்னை மின் உற்பத்தி நிலையத்தில் 1200 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 804 மெகாவாட் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் நேற்றைய அதிகபட்ச மின்சாரத் தேவை 11,367 மெகாவாட் ஆகும். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்கள், நெய்வேலி மற்றும் கூடங்குளம் மின் நிலையங்கள் உள்ளிட்ட மத்திய அரசு தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரம், காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தைக் கொண்டு இந்த தேவையை நிறைவேற்றிவிட முடியும்.

ஆனால், அதை செய்வதற்கு பதிலாக நீண்ட கால கொள்முதல் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 3,189 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து அரசு வாங்குகிறது.

தமிழ்நாடு மின் வாரியத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை ரூ.3.42 மட்டுமே. இதன் உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் இருந்து ரூ.4.91 முதல் ரூ.6.00 வரை விலை கொடுத்து வாங்குவதால் ஒப்பந்த காலத்தில் மின்சார வாரியத்திற்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்படும்.

எனவே, அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, தனியாருக்கு சாதகமாக மின் உற்பத்தியை குறைத்தது குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story