காய்ச்சல் வந்த உடனே தனியார் மருத்துவர்,சுய மருத்துவத்தை பார்க்காமல் அரசுமருத்துவமனைக்கு வரவேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்


காய்ச்சல் வந்த உடனே தனியார் மருத்துவர்,சுய மருத்துவத்தை பார்க்காமல் அரசுமருத்துவமனைக்கு வரவேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Oct 2017 2:54 PM IST (Updated: 2 Oct 2017 2:54 PM IST)
t-max-icont-min-icon

காய்ச்சல் வந்த உடனே தனியார் மருத்துவர்,சுய மருத்துவத்தை பார்க்காமல் அரசுமருத்துவமனைக்கு வரவேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை

கிரீன்வேஸ் சாலையில்  முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் டெங்கு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் சுகாதாரதுறை அமைச்சர்  டாக்டர் விஜய பாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

100% உயிரிழப்பு ஏற்படாத வகையில் அனைத்து துறைகளும் களப்பணியாற்ற அறிவுரை வழங்கப்பட்டது. அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து களப்பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தினார். நாளை காலை 8.30 மணி முதல் மாநாகராட்சி சார்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்படும். பொது இடங்களில் நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது குறித்து முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.

வியாழக்கிழமை தோறும் டெங்கு எதிர்ப்பு தினம் பெயரில் பள்ளிகளில் தூய்மை திட்டம் மேற்கொள்ளப்படும். டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தட்டணுக்களை கண்டறிய சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

போதிய அளவு மருந்துகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். காய்ச்சல் வந்த உடனே தனியார் மருத்துவர், சுய மருத்துவத்தை பார்க்காமல் அரசுமருத்துவமனைக்கு வரவேண்டும்.

ஒவ்வொரு வியாழக்கிழமையும் டெங்கு ஒழிப்பு நாளாக கடைபிடிக்கப்படும். டெங்கு காய்ச்சல் குறித்து குறும்படங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

உள்ளாட்சி அமைப்புடன் இணைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நல்ல தண்ணீரில் கொசுப்புழு இல்லாமல் இருப்பதை மக்கள் உறுதி செய்ய வேண்டும். நடப்பு சீசனில் சளி, காய்ச்சல், டெங்கு காய்ச்சல்தான் அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சலால் 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வகை காய்ச்சல்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story