பவானிசாகர், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் 5-ந் தேதி தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு


பவானிசாகர், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் 5-ந் தேதி தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 3 Oct 2017 4:00 AM IST (Updated: 3 Oct 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பாசன வசதிக்காக பவானிசாகர், மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து 5-ந் தேதி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னை

இதுகுறித்து தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டம், தாமிரபரணி பாசன அமைப்பின் நேரடி-மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு, பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேளாண் மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை ஏற்று வருகிற 5-ந் தேதி முதல் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

தாமிரபரணி பாசன அமைப்பிலுள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங் கால்வாய், நெல்லை கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், ஈரோடு மற்றும் பவானி வட்டங்களில் உள்ள அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி திட்ட வாய்க்கால்களின் வழியாக முதல்போக பாசனத்திற்காக பவானிசாகர் அணையிலிருந்து 5-ந் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள 1 லட்சத்து 43 ஆயிரத்து 747 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story