ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் அவசர ஆலோசனை


ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் அவசர ஆலோசனை
x
தினத்தந்தி 5 Oct 2017 5:30 AM IST (Updated: 5 Oct 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் கமல்ஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து தனிக்கட்சி தொடங்குவது குறித்து கருத்து கேட்டார்.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதாக அறிவித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அனைத்து துறைகளிலும் ஊழல் இருப்பதாக கண்டித்தார். அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் ஆதாரங்களை திரட்டி லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு போலீசுக்கு அனுப்பும்படியும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

அப்போது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அரசியல் பிரவேசத்தையும் கட்சி பெயரையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து கமல்ஹாசன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடந்தது. மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாகவும் ஒன்றாக அமர வைத்தும் கருத்துகள் கேட்டார்.

தனிக்கட்சி தொடங்குவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை, அரசியலுக்கு வரும் பட்சத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு எப்படி இருக்கும், தேர்தலில் போட்டியிட்டால் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு மாற்றாக வலுவாக நிற்க முடியுமா? என்றெல்லாம் ரசிகர்களிடம் கருத்துகள் கேட்டதாக கூறப்படுகிறது.

தனிக்கட்சி தொடங்கும் நிலையில் எந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கொள்கைகளை உருவாக்குவது, மக்கள் தேவைகள் என்ன? என்றெல்லாம் ரசிகர்களுடன் கமல்ஹாசன் விவாதித்ததாக தெரிகிறது. நற்பணி இயக்கத்தினர் இப்போதே மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை தீர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்களிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அரசியலில் ஈடுபடுவதை தொடர்ந்து விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். எப்போது சுற்றுப்பயணத்தை தொடங்குவது என்பது குறித்தும் ரசிகர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Next Story