‘மெர்சல்’ படத்தின் தலைப்பு யாருக்கு சொந்தம்? ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு


‘மெர்சல்’ படத்தின் தலைப்பு யாருக்கு சொந்தம்? ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 1:22 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் தலைப்பு யாருக்கு சொந்தம்? என்று ஐகோர்ட்டு நாளை தீர்ப்பு கூறுகிறது.

சென்னை,

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். ஏ.ஆர். பிலிம் பேக்டரி என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஒரு படத்தின் தலைப்பை பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பதிவு செய்துவிட்டால் அதே தலைப்பில் வேறு யாரும் படம் எடுக்கமுடியாது.

எனது மகன் ஆரூத்தை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014-ம் ஆண்டே தலைப்பையும், கதையையும் தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்துள்ளேன்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ என்ற தலைப்பில் தேனாண்டாள் ஸ்டூடியோ உரிமையாளர் ராமசாமி படம் எடுத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ‘மெர்சல்’ என்ற தலைப்பு நான் பதிவு செய்துள்ள ‘மெரசலாயிட்டேன்’ என்ற தலைப்பை போன்றே உள்ளது.

எனவே, தேனாண்டாள் ஸ்டூடியோ நிறுவனமோ, அதன் உரிமையாளரான ராமசாமியோ அல்லது மற்ற நபர்களோ ‘மெர்சல்’ என்ற பெயரைப் பயன்படுத்தி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மெர்சல்’ என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட ஏற்கனவே இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி அனிதாசுனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேனாண்டாள் ஸ்டுடியோ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மெர்சல் என்ற தலைப்பும், மெரசலாயிட்டேன் என்ற தலைப்பும் வெவ்வேறு ஆகும். நாங்களும் இந்த படத் தலைப்பை ஏற்கனவே பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பதிவு செய்துள்ளோம். பெரும் பொருட்செலவில் இந்த படத்தை எடுத்துள்ளோம். இந்த சூழலில் படத்திற்கு தடை விதித்தால் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தடையை நீக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, மெர்சல் என்ற தலைப்பு யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பு 6-ந் தேதி (நாளை) பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார். அதுவரை ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story