ரஜினிகாந்த்- கமல்ஹாசனுக்கு வரவேற்பு:‘அரசியலுக்கு வருவது எளிது, நிலைப்பது கடினம்’ நடிகர் விவேக் பேட்டி


ரஜினிகாந்த்- கமல்ஹாசனுக்கு வரவேற்பு:‘அரசியலுக்கு வருவது எளிது, நிலைப்பது கடினம்’ நடிகர் விவேக் பேட்டி
x
தினத்தந்தி 5 Oct 2017 4:15 AM IST (Updated: 5 Oct 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

அரசியலுக்கு வருவது எளிது, நிலைப்பது கடினம் என்றும், ரஜினிகாந்த்-கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாகவும் சென்னையில் மரக்கன்றுகள் நடும் விழாவில், நடிகர் விவேக் கூறினார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதி மக்கள் பிறந்தநாள் விழாவின் போது, அவர்களுடைய வீட்டின் அருகே மரக்கன்று நடும் திட்டத்தை தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டா லின் கடந்த ஜூலை 1-ந்தேதி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்துக்கு ‘பசுமை சைதை’ என்று பெயர் சூட்டப்பட்டு, தொகுதி முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் சைதாப்பேட்டை தொகுதியில் வசிக்கும் 100 பேரின் பிறந்தநாளையொட்டி, பன்னீர்செல்வம் நகர் அம்பேத்கர் விளையாட்டுத்திடல் மற்றும் கோதண்ட ராமர் கோவிலை சுற்றி 100 அரச மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக், மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்டு 100 மரக்கன்றுகளை நட்டனர்.

இந்த நிகழ்ச்சியில், கமலா தியேட்டர் உரிமையாளர் வி.என்.டி. வள்ளியப்பன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த்ராமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மரக்கன்றுகள் நடப்படுவது குறித்து மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

‘பசுமை சைதை’ திட்டத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றினை ஒரு ஆண்டு காலம் நல்ல முறையில் தொடர்ந்து பராமரிப்பவர்களுக்கு ‘பசுமை பாதுகாவலர்’ விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட விரும்புபவர்கள் 9566209124, 9566209125 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் விவேக்கிடம், ‘ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வந்தால் சக நடிகராக நீங்கள் அவர்களை வரவேற்பீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறும்போது, ‘ நான் எப்போதும் அவர்களை வரவேற்கிறேன் என்று தான் சொல்லி வருகிறேன். யாரும் தமிழ்நாட்டில் அரசியலுக்கு வரலாம். வரக்கூடாது என்று இல்லை. அரசியலுக்கு வந்த பிறகு முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதை தான் மக்கள் விரும்புவார்கள். அரசியலுக்கு வருவது எளிது, நிலைப்பது கடினம்’ என்றார்.

Next Story