சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் பிரதமருக்கு தம்பிதுரை கடிதம்
2019 முதல் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்"என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டு வருகிறது. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசும் இந்த கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு தனது ஆதரவை தெரிவித்தது.
இவ்வருட தொடக்கத்தில் எதிர்கால வாக்காளர்களுக்கு அதிகாரம் வழங்குதலுக்கான உத்திகள் பற்றி கருத்தரங்கில் பேசிய தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி, எதிர்காலத்தில் கூடுதல் நிதி ஆதாரங்களோடு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். ஆனால் 2 முக்கிய நிபந்தனைகள் உள்ளன. ஒன்று, அரசியல் கருத்தொற்றுமை ஏற்படுத்தி, இது தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும். அடுத்து, மின்னணு ஓட்டு எந்திரங்கள் உள்ளிட்டவற்றைப் பொறுத்தமட்டில் அவற்றை வாங்குவதற்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை என்றார்.
பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்குத்தான் அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படும் என தேர்தல் கமிஷன் கூறுகிறது.
தற்போது 2018 செப்டம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுறை பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-
2019 முதல் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் குறைந்தபட்சம் 20 மாநிலங்களின் சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடத்தலாம்.என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story