வாக்கி டாக்கி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துசி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


வாக்கி டாக்கி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்துசி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 Oct 2017 12:45 AM IST (Updated: 6 Oct 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

வாக்கி டாக்கி கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவல்துறையினரின் தகவல் தொடர்புக்காக வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறித்து 11 வினாக்களை எழுப்பி தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த வினாக்கள் மிகவும் முக்கியமானவை. காவல் துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டபோது, மோட்டோரோலா சொல்யூசன்ஸ் என்ற ஒரு நிறுவனம் மட்டுமே ஒப்பந்தப்புள்ளிகளை கோரியிருந்தது.

ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரினால் தான் அவற்றுக்கு இடையே போட்டி ஏற்பட்டு ஒப்பந்தத் தொகை குறையும். அதற்கு மாறாக ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ஒப்பந்தம் கோரியிருந்தால் அந்த ஒப்பந்த நடைமுறையை ரத்து செய்து விட்டு, புதிதாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். இதுதான் காலங் காலமாக உள்ள நடைமுறையாகும்.

ஆனால், வாக்கி டாக்கி வாங்கும் விஷயத்தில் மோட்டோரோலா சொல்யூசன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.83.45 கோடிக்கான ஒப்பந்தத்தை காவல்துறை தலைமை இயக்குனர் வழங்கியுள்ளார்.

மிகவும் அதிகமாக ஒரு வாக்கி டாக்கி ரூ.2.08 லட்சம் என்ற விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்குவதென்பது தகவல் தொடர்பு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அதைத் தாண்டி மாநிலத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும்.

இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்படாமல் அடிப்படைத் தகுதிகள் கூட இல்லாத நிறுவனத்திற்கு விதிகளை மீறி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது.

எனவே, காவல்துறைக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story