டெங்கு காய்ச்சலுக்கு 400 பேர் பலி: நடவடிக்கை எடுத்து தடுக்காதது வெட்கக்கேடான செயல் மு.க.ஸ்டாலின்


டெங்கு காய்ச்சலுக்கு 400 பேர் பலி: நடவடிக்கை எடுத்து தடுக்காதது வெட்கக்கேடான செயல் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 6 Oct 2017 5:15 AM IST (Updated: 6 Oct 2017 12:55 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 400 பேர் பலியாகி இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தடுக்காதது வெட்கக்கேடான செயல் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது கொளத்தூர் தொகுதியில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். செம்பியம், சோமையா ராஜா வீதி ஆகிய இடங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.

மேலும், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின், பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு மு.க.ஸ்டாலின் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசின் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொன்னாலும், கடந்த இரு தினங்களில் 15 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்து இருக்கிறார்களே?.

பதில்:- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். உண்மையை ஓரளவாவது அவர் ஒப்புக்கொண்டு இருப்பதை வரவேற்கிறேன். ஆனால், ஒரு பெரிய உண்மையை மறைத்துவிட்டு, டெங்கு காய்ச்சலால் இதுவரை 26 பேர் மட்டுமே இறந்திருப்பதாக ஒரு தவறான தகவலை சொல்லியிருக்கிறார்.

தினசரி 10 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு இறந்து வருகிறார்கள். அதன்படி, இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு பாதிப்பால் இறந்திருப்பதாக ஆதாரங்களுடன் செய்திகள் வந்திருக்கின்றன. எனவே, உண்மைகளை மூடி மறைக்கும் முயற்சியில் இந்த அ.தி.மு.க. அரசு ஈடுபட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, மாநகராட்சிகளில் ஆங்காங்கு சேர்ந்துள்ள குப்பைகளை முன்கூட்டியே அகற்றி, நீர்நிலைகளை எல்லாம் முறையாக சுத்தப்படுத்தி, பராமரித்து இருந்திருந்தால் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால், டெங்கு வந்திருக்கும் பகுதிகளில் மட்டும் வந்து, சுத்தம் செய்வது போன்ற பாவனைகள் செய்து வருகிறார்கள். இந்த அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து முன்கூட்டியே டெங்கு காய்ச்சலைத் தடுக்காதது வெட்கக்கேடான செயல்.

கேள்வி:- வாக்கி - டாக்கி வாங்குவதில் ரூ.88 கோடி ஊழல் நடந்திருப்பதாக டி.ஜி.பி. மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறதே?.

பதில்:- இதுதொடர்பாக, உள்துறைச் செயலாளர் டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அந்த டி.ஜி.பி. யார் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஏற்கனவே குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி மாமூல் வாங்கிய பட்டியலில் அவர் பெயர் இருக்கிறது. அதுமட்டுமல்ல, நியாயமாக அவர் இந்நேரம் ஓய்வுப்பெற்று இருக்க வேண்டியவர். ஆனால், 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு செய்யப்பட்டு, டி.ஜி.பி. பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்துறையில் ரூ.88 கோடி ஊழல் நடந்திருப்பதை பார்க்கும்போது, நாடு எந்த நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

கேள்வி:- உங்களுடைய கொளத்தூர் தொகுதிக்கு நீங்கள் அடிக்கடி வந்து ஆய்வு செய்வது போல மற்ற தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களது தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறார்களா?.

பதில்:- நிச்சயமாக மேற்கொண்டு வருகிறார்கள். ரேஷன் கடைகளில் பற்றாக்குறை என்ற பிரச்சினை ஏற்பட்டதும், உடனடியாக தி.மு.க.வின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும், அவரவர் தொகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்கள். இப்போது, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவிவரும் நிலையில், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாமல், தி.மு.க. மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் அவரவர் தொகுதிகளில், பகுதிகளில், இருக்கும் மருத்துவமனைகளுக்கு எல்லாம் நேரில் சென்று, டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, அவர்களுக்குத் துணை நிற்கும் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Next Story