தேர்தல் ஆணைய அதிகாரி ஆவணங்களுடன் 13-ந் தேதி ஆஜராக வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


தேர்தல் ஆணைய அதிகாரி ஆவணங்களுடன் 13-ந் தேதி ஆஜராக வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 6 Oct 2017 3:30 AM IST (Updated: 6 Oct 2017 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஆவணங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வருகிற 13-ந் தேதி ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டிருந்தது தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வருகிற 13-ந் தேதி ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே.போஸ், தி.மு.க. சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். முடிவில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து சரவணன், சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஏ.கே.போசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு அளித்த படிவத்தில் ஜெயலலிதா தனது இடது கை பெருவிரல் ரேகையை பதிவு செய்துள்ளார்.

இதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் பாலாஜி அந்த படிவத்தில் சான்றொப்பம் அளித்துள்ளார். ஜெயலலிதா சுயநினைவுடன் தான் கை ரேகையை வைத்தாரா? என்பது சந்தேகமாக உள்ளது.

எனவே, அந்த கைரேகையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். அந்த படிவத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது சட்டவிரோதம் என்று அறிவித்து ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் உள்ள கைரேகை ஜெயலலிதாவின் கைரேகை தானா?, அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதா? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் அக்டோபர் 6-ந் தேதி (அதாவது நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல், இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை இந்திய தேர்தல் ஆணையத்தில் நடந்து வருவதால் முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், வழக்கின் விசாரணையை வருகிற 13-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் முதன்மை செயலாளர் அனைத்து ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதன்பின்பு, திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

Next Story