ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர தீவிரம்
கம்போடியாவில் தற்கொலை செய்து கொண்ட ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர தீவிர முயற்சி நடந்து வருகிறது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்பருத்திகுன்றத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது49). பிரபல ரவுடி. இவருக்கு குமாரி என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர் மீது காஞ்சீபுரம் மற்றும் சென்னை போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பல முறை கைது செய்யப்பட்டுள்ளார். பலமுறை குண்டர் சட்டத்திலும் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2006–2011–ம் ஆண்டில் காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக இருந்து வந்தார்.காஞ்சீபுரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அம்பேத்கர் வளவன் என்கிற நாராயணன் கொலை வழக்கில் ஸ்ரீதர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதற்காக காஞ்சீபுரம் கோர்ட்டு அவரை ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளில் பதுங்கி உள்ளதாக கூறப்பட்ட அவர் அங்கிருந்து போலீசாருக்கு கொலை மிரட்டலும் விடுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து ஸ்ரீதரின் சொந்தமான வீடுகள் உள்பட பலகோடி மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை போலீசார் முடக்கி சீல் வைத்தனர். அவரது மகன் சந்தோஷ்குமார் (24), மனைவி குமாரி உள்பட பலரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த ஆண்டு காலாவதியாகும் தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க ஸ்ரீதர் சென்னை வந்தால் அவரை பிடிக்க போலீசார் திட்டம் தீட்டி இருந்தனர்.இந்த நிலையில் அவர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்ரீதரின் வக்கீல், ஸ்ரீதரின் மகள் தனலட்சுமி, மகன் சந்தோஷ்குமார் ஆகியோர் கம்போடியா சென்று ஸ்ரீதர் தங்கியிருந்த பார்ம் ஹவுசின் அறை, அவரது உடலை வைத்திருக்கும் இடம் போன்றவற்றுக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை பார்த்து தற்கொலை செய்தது ஸ்ரீதர் தான் என அவரது மகள் தனலட்சுமி உறுதி செய்ததாக கூறப்படுகிறது.
ரவுடி ஸ்ரீதரின் உடலை இந்தியா கொண்டு வர அவர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ரவுடி ஸ்ரீதர் இலங்கையில் இருந்து கம்போடியாவுக்கு இலங்கை பிரஜை போல் போலி பாஸ்போர்ட் மூலம் சென்றதாகவும், அதனால் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாகவும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர். நேற்று காஞ்சீபுரத்தில் ஒரு வியாபாரியை மிரட்டி பணம் பறித்த ஸ்ரீதரின் நண்பர்களான ஆதிகேசவன்(47), ஸ்ரீதர் (எ) கருப்பு ஸ்ரீதர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் ஆதிகேசவன் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளது. இருவரிடம் இருந்து கத்திகள், உருட்டுக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.