டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு


டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Oct 2017 12:22 AM IST (Updated: 7 Oct 2017 12:22 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

சென்னை,

தமிழக மக்களை கடந்த 2 மாதங்களாக வாட்டி வதைத்து கொண்டிருக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தாத மாநில அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்தும் த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், கோவை தங்கம், கொட்டிவாக்கம் முருகன், த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜ், ஜி.ஆர்.வெங்கடேசன், பி.ஜி.சாக்கோ உள்ளிட்ட பலர் கலந்து கெண்டனர்.

பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதை முளையிலே கிள்ளி எறிய தமிழக அரசு தவறிவிட்டது. அதனால் தமிழக மக்கள் மிகப்பெரிய அச்சத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இது ஆளுங்கட்சியினரின் மெத்தன போக்கை காட்டுகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மருத்துவமனைகளில் தரமான மருந்துகள் 24 மணி நேரமும் கிடைக்க அரசு வழிவகை வேண்டும். மக்களை காக்கும் பொறுப்பு மத்திய அரசிற்கும் உண்டு. ஆகவே மத்திய அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை அழிக்க, வெளிநாடுகளைப் போல் நாமும் நவீன தொழில் நுட்பத்தை கையாள வேண்டும்.

மத்தியில் ஆளும் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு சுகா தாரத் துறைக்காக ஒதுக்கப்பட்டு கொண்டிருந்த நிதியை சுமார் 20 சதவீதம், ஆதாவது ரூ.16 ஆயிரம் கோடி குறைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்க செயல் ஆகும். ஆகவே மத்திய அரசு உடனே இந்த நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின் படி, டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, டெங்கு தடுப்பூசி மருத்துவ ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். அதற் கான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும். அரசுக்கும், மக்களுக்கும் தற்போது டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இனிமேல், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, த.மா.கா.சார்பில் தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story