மயிலாப்பூர் பகுதியில் இன்று முதல் சாலை போக்குவரத்தில் மாற்றம்


மயிலாப்பூர் பகுதியில் இன்று முதல் சாலை போக்குவரத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 7 Oct 2017 3:15 AM IST (Updated: 7 Oct 2017 12:33 AM IST)
t-max-icont-min-icon

வாகன நெரிசலை முன்னிட்டு மயிலாப்பூர் பகுதியில் இன்று (7-ந் தேதி) முதல் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை,

இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கற்பகாம்பாள் நகர்-ஆலிவர் சந்திப்பிலிருந்து லஸ் சர்ச் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை முதல் லஸ் சர்ச் சாலை வரை இருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் முசிறி சுப்பிர மணியன் (ஆலிவர் சாலை) சாலையிலிருந்து இடது புறம் திரும்பி பி.எஸ்.சிவசாமி சாலை செல்லலாம். அல்லது, வலது புறம் திரும்பி கற்பகாம்பாள் நகர் வழியாக லஸ் சர்ச் சாலை நோக்கி சென்று வலதுபுறம் அல்லது இடது புறம் திரும்பி செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

ஆனால், ஆலிவர் சாலையிலிருந்து வரும் அனைத்து மாநகர பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் இடது புறம் திரும்பி பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் கற்பகாம்பாள் நகரிலிருந்து லஸ் சர்ச் சாலை வழியாக இடது புறம் திரும்பி லஸ் சந்திப்பை வந்தடைந்து இடதுபுறம் திரும்பி ராயப்பேட்டை நெடுஞ்சாலை அல்லது நேராக கச்சேரி சாலை அல்லது வலது புறம் திரும்பி ஆர்.கே.மடம் சாலை வழியாக இலக்கை அடையலாம்.

கென்னடி 2-வது தெரு வழியாக லஸ் சர்ச் சாலைக்கு எந்த ஒரு வாகனமும் செல்ல அனுமதி இல்லை. அனைத்து வாகனங்கள் லஸ் அவென்யூ 1-வது தெருவிலிருந்து கண்டிப்பாக இடது புறம் திரும்பி ஆழ்வார்பேட்டை அல்லது கென்னடி 1-வது தெரு வழியாக ஆலிவர் ரோடு நோக்கி செல்லலாம்.

அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலையிலிருந்து நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலை அல்லது இடது புறம் திரும்பி லஸ் சர்ச் சாலை அல்லது வலது புறம் திரும்பி கச்சேரி சாலையை நோக்கி அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

ஆர்.கே.மடம் சாலையில் லஸ் சந்திப்பை நோக்கி வரும் சென்னை மாநகர போக்குவரத்து பயணிகள் வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் செல்ல அனுமதி இல்லை. அதற்கு பதிலாக இடது புறம் திரும்பி லஸ் சர்ச் சாலை வழியாக கற்பகாம்பாள் நகரை வந்தடைந்து பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம். அல்லது, வலது புறமாக திரும்பி கச்சேரி சாலை வழியாக அவர்கள் செல்லும் இடம் நோக்கி செல்லலாம்.

சாந்தோம் சந்திப்பில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் வலது புறம் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படமாட்டாது. மாறாக அவ்வாகனங்கள் நேராக லஸ் சர்ச் சாலை, கற்பகாம்பாள் நகர் சென்று அவர்கள் செல்ல வேண்டிய இலக்கை அடையலாம்.

லஸ் சந்திப்பிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ராயப்பேட்டை மேம்பாலம் நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பி.எஸ்.சிவசாமி சாலையில் இடது புறம் திரும்ப அனுமதிக்கப்படாது.

ராயப்பேட்டை நெடுஞ்சாலை ராயப்பேட்டை மேம்பாலத்திலிருந்து கச்சேரி சாலையை நோக்கி வரும் அனைத்து இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் திருவள்ளுவர் சிலை அருகில் இடது புறம் திரும்பி முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெரு, கல்வி வாரு தெரு வழியாக கச்சேரி சாலையை அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story