கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்: விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்


கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம்:  விவசாயத்தை பாதிக்காத வகையில் மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 7 Oct 2017 8:15 PM IST (Updated: 7 Oct 2017 7:58 PM IST)
t-max-icont-min-icon

கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை விவசாயத்தை பாதிக்காத வகையில், மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழ்நாட்டின் 7 மாவட்டங்கள் வழியாக கர்நாடகத்துக்கு எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்றும், அடுத்த ஆண்டிற்குள் அத்திட்டத்தை நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திரமோடி ஆணையிட்டிருக்கிறார். தமிழக உழவர்களின் நலனைப் பாதிக்கும் வகையிலான இந்த அறிவுறுத்தல் கண்டிக்கத்தக்கதாகும்.

திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு குழாய் பாதை குறித்து விவசாயிகளுக்கு ஒன்றும் தெரியாது என்ற எண்ணத்தில் பிரதமர் இத்தகைய கருத்துகளை தெரிவித்திருக்கிறார். மேலும் இத்திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படாது என்றும் பிரதமர் கூறியுள்ளார். அது உண்மையல்ல. எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்பட்டால் விவசாயத்துக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பதை தமிழக விவசாயிகள் நன்றாக அறிந்துள்ளனர்.

இத்திட்டத்தால் விவசாயத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று சொன்னால் அதை விவசாயிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்று பிரதமர் நம்புவது குழந்தைத்தனமானது. கெயில் எரிவாயுக் குழாய் பாதைத் திட்டத்தை எப்படியாவது செயல்படுத்திவிட வேண்டும் என்றும் துடிக்கும் பிரதமர் நரேந்திரமோடி, இப்பிரச்சினையை விவசாயிகளின் கோணத்தில் இருந்து பார்க்கத் தவறியது ஏன்? என்பது தான் தெரியவில்லை.

எனவே, இத்திட்டத்தை அதன் இப்போதைய வடிவில் செயல்படுத்துவதை விடுத்து விவசாயத்தை பாதிக்காமல் மாற்று வழியில் செயல்படுத்தும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகனும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


Next Story