உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சல் அதிகரிக்க காரணம்: டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்க காரணம் என டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜனதா சார்பில், சென்னை டி.பி.சத்திரம் அருகே உள்ள காமராஜர் நகர், வள்ளியம்மாள் தெரு சந்திப்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் சக்கரவர்த்தி, இளைஞர் அணி மாநில செயலாளர் ஜி.சுரேஷ் கர்ணா, மருத்துவர் அணி மாநில செயலாளர் டாக்டர் லட்சுமி பாலாஜி, மாவட்ட தலைவர் தனஞ்ஜெயன் மற்றும் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுகிறது. எல்லா இடங்களிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சல் இருக்கிறது. தமிழக அரசு இதனை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். சாதாரண ஆஸ்பத்திரிகளில் கூட காய்ச்சல் வார்டுகளை தொடங்க வேண்டும். தனியார் ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சல் வார்டுகள் தொடங்கப்பட வேண்டும்.தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினாலும், இப்போது உள்ள நோயின் வீரியத்துக்கு போதுமானதாக இல்லை. டெங்கு காய்ச்சலுக்கு சுகாதாரமின்மையே காரணம். உள்ளாட்சி நிர்வாகம் இல்லாததே டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகரிக்க காரணம். டெங்கு காய்ச்சலை முதல்–அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். பொதுமக்களும் காய்ச்சல் வந்தால் 2, 3 நாட்களில் குணமாகிவிடும் என்று இருந்துவிடாமல் ஆரம்பநிலையிலேயே அரசு ஆஸ்பத்திரிகளுக்கு செல்ல வேண்டும்.
கேரளாவில் அனைத்து துறையினரும் அர்ச்சகராகி இருப்பது வரவேற்கத்தக்கது. தா.பாண்டியனை, தாமஸ் பாண்டியன் என்று அவரது முழு பெயரை சொல்வது தனிநபர் விமர்சனம் ஆகாது. அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை விமர்சனம் செய்யும்போது, அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதை தெரிவிக்க அவரது பெயரை தெரிவித்தேன்.கெயில் எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 7 மாவட்டங்களில் போராட்டம் நடத்த போவதாக மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். ஆனால், அவர் கையெழுத்து போட்டதால் தான் கெயில் எரிவாயு திட்டமே தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் போது ஒரு செயல்பாடு, ஆட்சியில் இல்லாத போது ஒரு செயல்பாட்டை மேற்கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.