பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது; டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 20 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்


பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது; டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 20 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 11 Oct 2017 5:45 AM IST (Updated: 10 Oct 2017 9:24 PM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது.

சென்னை,

நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.  டெங்கு காய்ச்சலுக்கு 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பள்ளி, கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், சரக்கு சேமிப்பு குடோன்கள், தியேட்டர்கள், வாகன பணிமனைகள், காலிமனைகளிலும் ஆய்வு செய்து, டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்களை அழிக்க தீவிரமான நடவடிக்கையை முடுக்கி விட்டு இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் டெங்குவின் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது. அதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 2 தினங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தி இருந்ததாக கடை, வணிக நிறுவனங்கள், கட்டிட உரிமையாளர், காலிமனை உரிமையாளர், வீட்டு உரிமையாளர் என அனைவருக்கும் பொது சுகாதாரத்துறையின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அந்த நோட்டீசில், கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்கள் உள்ள தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களில் உள்ள தண்ணீரை கீழே கொட்டி கொசுப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை உடனடியாக அழிக்க வேண்டும். தண்ணீர் தொட்டி மற்றும் கொள்கலன்களை பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கொண்டு சுத்தம் செய்து கொசு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும். வீணான பொருட்களான பிளாஸ்டிக் டப்பா, டயர், உடைந்த குடங்கள் போன்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோட்டீஸ் வழங்கப்பட்ட 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர்கள் அதை செய்ய தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939–ல் பிரிவு 134(1)–ன் கீழ் நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் போலீஸ் மூலம் இந்திய தண்டனை சட்டம் 269–ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொது சுகாதாரத்துறை மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த மாதிரியான தண்டனை இருக்கும்? என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், ‘எச்சரிக்கை நோட்டீசை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது’ என்றனர்.


Next Story