தேனி மஞ்சளாறு நீர் தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடிக்கு 15–ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு


தேனி மஞ்சளாறு நீர் தேக்கத்தில் இருந்து முதல் போக சாகுபடிக்கு 15–ந்தேதி முதல் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 11 Oct 2017 10:15 PM IST (Updated: 11 Oct 2017 9:13 PM IST)
t-max-icont-min-icon

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை,

தேனி மாவட்டம், மஞ்சளாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடும்படி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று மஞ்சளாறு நீர்தேக்கத்திலிருந்து பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக வருகிற 15–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

அதேபோல தேனி மாவட்டம், சோத்துப்பாறை நீர்தேக்கத்திலிருந்து பழைய நன்செய் மற்றும் புதிய புன்செய் நிலங்களுக்கும் பாசனத்திற்காகவும், பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவைக்கும் 15–ந்தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 865 ஏக்கர் நிலங்களின் பாசன தேவையும் மற்றும் பெரியகுளம் நகராட்சி குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும் என்பதையும் நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story