குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிப்பு; பீர் விலையில் மாற்றம் இல்லை


குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிப்பு; பீர் விலையில் மாற்றம் இல்லை
x
தினத்தந்தி 12 Oct 2017 4:45 AM IST (Updated: 12 Oct 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

‘டாஸ்மாக்’ மதுபான வகைகள் விலை உயர்வு நாளை(சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை,

குவார்ட்டருக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை விலை அதிகரித்துள்ளது. பீர் விலையில் மாற்றம் இல்லை.

தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் ‘டாஸ்மாக்’ நிறுவனம் முதலிடம் வகிக்கிறது. டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மதுவிலக்கு என்ற கொள்கை அடிப்படையில் 1,000 ‘டாஸ்மாக்’ கடைகள் மூடப்பட்டன. நேரமும் குறைக்கப்பட்டது. எனினும் ‘டாஸ்மாக்’ விற்பனை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 5 ஆயிரத்து 500–க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் மூலம் மது விற்பனை நடந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ‘டாஸ்மாக்’ மதுபான விலையை உயர்த்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தமிழக அமைச்சரவை ‘டாஸ்மாக்’ மதுபான வகைகள் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து குவார்ட்டர் அளவு கொண்ட ரம், விஸ்கி, பிராந்தி, ஓட்கா போன்ற மது வகைகள் விலை ரூ.10 முதல் ரூ.12 வரை அதிகரிக்க உள்ளது.

‘ஆப்’ அளவு கொண்ட மது வகைகள் ரூ.20 வரையிலும், ‘புல்’ அளவு கொண்ட மது வகைகள் ரூ.40 வரையிலும் விலை அதிகரிக்கும்.

பீர் விலையை பொறுத்த வரையில் மாற்றம் இல்லை. பழைய விலையிலேயே பீர் விற்பனை செய்யப்படும்.  அதே போன்று ‘எலைட்’ மதுபான வகைகள் விலையும் உயர்த்தப்படவில்லை.

மதுபானங்கள் மீதான இந்த விலை உயர்வு 13–ந்தேதி(நாளை) முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 600 கோடி கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் 1–ந்தேதி டாஸ்மாக் மதுபானங்கள் விலை குவார்ட்டருக்கு ரூ.8 உயர்த்தப்பட்டது. அதன்பின்னர் தற்போது விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

மதுபானம் விலை உயர்வு மதுபிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மதுபிரியர்கள் சிலர் கூறியதாவது:–

தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் மதுபானம் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ‘புல்’ அளவு கொண்ட மதுபாட்டில் வாங்கும்போது ரூ.40 உயரும் என்கிறார்கள். இந்த விலையில் நாங்கள் ஒரு ‘கட்டிங்’ அல்லது மினி பீர் வாங்கி அருந்தி விடுவோம்.

தற்போது மதுபானம் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் இனிமேல் குவார்ட்டருக்கு கூடுதலாக 5 ரூபாய் கேட்க கூடாது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story