டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த நிறுவனங்களிடம் இருந்து ரூ.1 கோடி அபராதம் வசூல் - விஜயபாஸ்கர்
டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிஉள்ளார்.
சென்னை,
நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு 100–க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டெங்குவை ஏற்படுத்தும் கொசுப்புழுக்கள் உருவாவதற்கு ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தும் கடை, வணிக நிறுவனங்கள், கட்டிட உரிமையாளர், காலிமனை உரிமையாளர், வீட்டு உரிமையாளர் என அனைவருக்கும் பொது சுகாதாரத்துறையின் தொற்று நோய் பிரிவு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் டெங்குவை பரப்பும் கொசுப்புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலையை ஏற்படுத்தியதாக மொத்தம் 20 ஆயிரம் பேருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எச்சரிக்கை நோட்டீசை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது. மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் தண்டனை சட்டப்பிரிவில் இடம் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் டெங்கு கொசு உற்பத்தியாக காரணமாக இருந்த வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ. 1 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிஉள்ளார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஏய்ம்ஸ் மருத்துவர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story