வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்க குட்டிக்கு முதல்-அமைச்சர் பெயர் சூட்டினார்


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்க குட்டிக்கு முதல்-அமைச்சர் பெயர் சூட்டினார்
x
தினத்தந்தி 12 Oct 2017 11:15 PM GMT (Updated: 12 Oct 2017 7:23 PM GMT)

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்ககுட்டிக்கு ‘விஷ்ணு’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெயர் சூட்டினார்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கும், கவிதா என்ற பெண் சிங்கத்திற்கும் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி பெண் சிங்ககுட்டி பிறந்தது. இந்த பெண் சிங்ககுட்டிக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.9.2011 அன்று ‘ஜான்சி’ என்று பெயர் சூட்டினார். இந்த ஜான்சி என்ற பெண் சிங்கம் சிவா என்ற ஆண் சிங்கத்துடன் இணை சேர்ந்து கடந்த 6.2.2017-ம் ஆண்டு ஒரு ஆண் சிங்ககுட்டியை ஈன்றது. இதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

புதிதாக பிறந்த இந்த சிங்ககுட்டிக்கு ‘விஷ்ணு’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெயர் சூட்டினார். பின்னர் சிங்ககுட்டி அடைக்கப்பட்டு இருந்த கூண்டுக்கு அருகில் சென்ற முதல்-அமைச்சர், மைக் மூலம் மூன்று முறை பெயர் சொல்லி சிங்ககுட்டியை அழைத்தார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பூங்காவில் உள்ள பேட்டரி வேனில் சென்று பல்வேறு விலங்குகளின் இருப்பிடங்களை சுற்றிப்பார்த்து பூங்காவை ஆய்வு செய்தார்.

முன்னதாக பூங்காவின் தெற்கு பகுதியில் கேளம்பாக்கம் சாலையில் ரூ.7 கோடியே 13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன கட்டிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு பூங்கா முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது பணியில் இருந்த ஒரு பெண் போலீஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் தமிழ்நாடு உயிரியல் பூங்கா ஆணையத்தின் 19-வது ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் சேலம் குரும்பபட்டி பூங்கா ஆகியவற்றை மேம்படுத்த ரூ.9.12 கோடி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும், பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் பூங்காவில் ரூ.3 கோடி செலவில் 40 இருக்கைகள் கொண்ட 4 சிறிய ரெயில்கள் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

Next Story