தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம்; முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்


தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளம்; முதல்–அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 13 Oct 2017 4:15 AM IST (Updated: 13 Oct 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

தமிழ் இணைய கல்விக்கழகத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதல்–அமைச்சர் திறந்துவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் பரிமாற்ற தரவுகளை பாதுகாத்திடவும், தங்குதடையற்ற தொடர் சேவை வழங்கிடவும், திருச்சிமாவட்டம், நவல்பட்டில் அமைந்துள்ள எல்கோசெஸ்சின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.59 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில தரவு மையத்திற்கான பேரிடர் மீட்பு மையம், ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வுக் கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் ஆகியவற்றை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்துவைத்தார்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், விஸ்வநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள எல்கோசெஸ்சில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடம்; திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அமைந்துள்ள எல்கோசெஸ்சில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சேகரிப்புதொட்டி, மேல்நிலை தொட்டி மற்றும் குழாய் அமைப்பு வசதிகள் உள்ளிட்ட குடிநீர் உட்கட்டமைப்பு வசதிகள்;

மதுரை மாவட்டம் இலந்தைகுளம் எல்கோசெஸ்சின் நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்ப கட்டிடத்தில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் சார்பில் ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலந்தாய்வு கூடம், விருந்தினர் கூடம் மற்றும் உணவருந்தும் கூடம் என மொத்தம் ரூ.85 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டிலான தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த கட்டிடங்களை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

தமிழ் இணைய கல்விக்கழகத்தின் www.tamilvu.org என்ற இணையதளம் ரூ.12 லட்சத்து 26 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார். இம்மேம்படுத்தப்பட்ட இணையதளம் பொதுமக்கள், மாணவர்கள், தமிழ் ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் கல்வித்திட்டங்கள், நூலகம், கணித்தமிழ், ஆய்வு மற்றும் உருவாக்கம், தகவலாற்றுப்படை போன்ற பல விவரங்களைக் கொண்டிருக்கும்.

தமிழ் இணையக்கல்வி கழகத்தால் ரூ.59 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘‘தமிழிணையம் மென்பொருள் தொகுப்பு 2’’ என்னும் தமிழ் மென்பொருள் தொகுப்பினை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்.

இந்த தமிழ் மென்பொருள் தொகுப்பில், தமிழ் இணையம் சொல்பேசி, தமிழ் இணையம் விவசாயத்தகவி, தமிழ் இணையம் தொல்காப்பியத்தகவல் பெறுவி, தமிழ் இணையம் தமிழ்ப் பயிற்றுவி மற்றும் தமிழ் இணையம் நிகழாய்வி எனும் 5 தமிழ் மென்பொருள்கள் அடங்கியுள்ளன. இம்மென்பொருள் தொகுப்பினைத் தமிழ் இணையக்கல்வி கழகத்தின் இணையதளத்தில் இருந்து பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

தமிழ்மொழி அல்லது தமிழோடு தொடர்புடைய தொல்லியல் சின்னங்கள், செப்பேடுகள், கல்வெட்டுக்கள், பாறை ஓவியங்கள், சுவரோவியங்கள், கோவில்கள், சிற்பங்கள், நாணயங்கள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களைத் தமிழ் இணையக்கல்விக் கழகம், தானே ஆவணப்படுத்தியும், எழும்பூர் அருங்காட்சியகம், தமிழக தொல்லியல் துறை, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கூடம் போன்ற தமிழக அரசின் பிற துறைகளில் ஆவணப்படுத்தியதைச் சேகரித்தும் முதற்கட்டமாக ரூ.20 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘‘தகவலாற்றுப்படை’’ என்னும் இணையதளத்தையும்; ஒரு கோடி ரூபாய் செலவினத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் இணையக்கல்விக் கழகத்தின் ‘‘தமிழ் மின் நூலகம்’’ இணையதளத்தினையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கிவைத்தார்.

இம்மின் நூலகத்தில் தமிழ் மொழி தொடர்புடைய அச்சு நூல்கள், இதழ்கள், ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பயன்பெற்றிடும் வகையில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின்னாளுமை முகமையினால் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மாதம் இருமுறை வெளிவரவுள்ள ‘‘இ–மடல்’’ முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இம்மின் மடல் மூலம், மத்திய, மாநில அரசுகளின் திட்டம், தற்போதைய தொழில்நுட்பம் சார்ந்த நிகழ்வுகள், மின்னாளுமையில் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும்.

மொத்தம் ரூ.173 கோடியே 84 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பள்ளி கல்வி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story