டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமானால் எடப்பாடி ஆட்சி ஒழிய வேண்டும்; மு.க. ஸ்டாலின் பேட்டி


டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமானால் எடப்பாடி ஆட்சி ஒழிய வேண்டும்; மு.க. ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2017 2:26 AM IST (Updated: 13 Oct 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமானால் எடப்பாடி ஆட்சி ஒழிய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சீனிவாசா நகரில் உள்ள லோகோ ஸ்கீம் 2–வது தெருவில் குப்பைகள் அதிகளவில் தேங்கியிருந்ததை கண்ட மு.க.ஸ்டாலின் தொண்டர்களுடன் இணைந்து குப்பைகளை அள்ளினார்.

அதேபோல, ஜவகர் வீதி மற்றும் வில்லிவாக்கம் ரெயில்வே பகுதியிலும் தேங்கியிருந்த குப்பைகளை அகற்றும் பணிகளை, தொண்டர்களுடன் இணைந்து மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

டெங்கு காய்ச்சலால் ஏறக்குறைய 15,000 பேர் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நூற்றுக்கணக்கானோர் டெங்கு பாதிப்பால் மாண்டு போயுள்ளனர். ஒரு நாளைக்கு 10 முதல் 20 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்து கொண்டிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரதான எதிர்க்கட்சி என்றமுறையில், தி.மு.க. சார்பில், டெங்கு பாதிப்பை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைப்பது, அறிக்கை வெளியிடுவது, கண்டனம் தெரிவிப்பது என்ற அளவில் நிறுத்தி விடாமல், அந்தப் பணிகளில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் எல்லாம் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தி, அதன்படி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அப்படிப்பட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முக்கிய காரணமாக அமைந்திருப்பது உள்ளாட்சித்தேர்தல் நடைபெறாமல் இருப்பது தான். உள்ளாட்சித்தேர்தல் உரிய நேரத்தில், முறைப்படி நடந்திருந்தால் ஒவ்வொரு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், ஊராட்சி ஆகிய அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்று இருந்திருப்பார்கள்.

அவர்கள் ஆங்காங்கே ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை அவ்வப்போது களைந்திருப்பார்கள். அதன் மூலம் டெங்கு காய்ச்சல் நிச்சயமாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், இப்போது குதிரை பேர ஆட்சி நடந்து கொண்டிருப்பதால், ஒரு பக்கம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் இருந்து கொண்டு, உயர் நீதிமன்றமே உத்தரவிட்டும், அந்தத்தீர்ப்பை மதிக்காமல், அதற்கு செவி சாய்க்காமல், உள்ளாட்சித்தேர்தலை இதுவரையிலும் நடத்தாமல், இன்னும் எப்படி தள்ளிப்போடுவது என்று முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அதனால் இன்றைக்கு நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் இந்தளவுக்குப் பரவி இருக்கிறது. எனவே, டெங்கு காய்ச்சல் ஒழிய வேண்டுமென்றால் எடப்பாடி தலைமையில் இருக்கும் இந்த டெங்கு ஆட்சி முதலில் ஒழிய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் நிருபர்கள், எதிர்க்கட்சித் தலைவர் தவறான குற்றச்சாட்டுகளை சொல்கிறார், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க தயாரா? என்று அமைச்சர் சரோஜா தெரிவித்து இருக்கிறாரே? என்று கேட்டப்போது, அவர் ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நேரில் வந்து பார்த்தால் போதிய ஆதாரங்கள் கிடைக்கும். தேவையெனில் நானும் தருவதற்கு தயாராக இருக்கிறேன் என்று மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.


Next Story