சென்னையில் சர்வதேச அறிவியல் விழா மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்


சென்னையில் சர்வதேச அறிவியல் விழா மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 Oct 2017 3:45 AM IST (Updated: 14 Oct 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் சர்வதேச அறிவியல் விழாவை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தொடங்கிவைத்தார்.

சென்னை,

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அறிவியல் தொழில்நுட்பம், புவி அறிவியல் ஆகியவற்றின் சார்பில் வருகிற 16-ந்தேதி சர்வதேச அறிவியல் விழா நடைபெறுகிறது. இதன் தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவில் மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மந்திரி டாக்டர் ஹர்ஷவர்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அறிவியல் விழாவை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:-

அறிவியல் பல பெரிய வழிகளில் நமக்கு உதவி செய்கிறது. அறிவியல் தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி நானோ தொழில்நுட்பத்திலும் இந்தியா சிறந்து விளங்குகிறது. அறிவியல் ஆய்வு தொடர்பாக, அமெரிக்கா, ஜப்பான், கனடா, இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்பட்டு வருகிறது.

உலக நாடுகள் தயாரித்த பல செயற்கைகோள்களை இஸ்ரோ நிறுவனம் ராக்கெட் மூலம் அனுப்புகிறது. அந்த அளவுக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் உயர்ந்துள்ளனர். இந்தியா இளைஞர்களை கொண்ட நாடு. இளைஞர்கள், படித்துக்கொண்டிருக்கிற மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்கள்.

இந்த விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள் என நிறையபேர் கலந்துகொண்டுள்ளனர். விழா முடியும் வரை இன்னும் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் அறிவியல் தொழில்நுட்பம் சம்பந்தமாக சந்தேகங்களை போக்கிக்கொள்ள இது அரிய வாய்ப்பாக அமையும்.

இளம் விஞ்ஞானிகளுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் புதிய அறிவியல் சாதனங்களை கண்டுபிடியுங்கள். அது இந்திய சமுதாயத்திற்கு மட்டுமல்லாமல் உலகத்திற்கே பயன்படும் வகையில் இருக்கட்டும். அதாவது ஏழைகள் உள்பட அனைவரும் பயனடையும் வகையில் இருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை இணை மந்திரி ஓய்.எஸ்.சவுத்ரி, வங்காள தேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துணை மந்திரி யேபேஸ் ஓஸ்மன், ஆப்கானிஸ்தான் உயர் கல்வித்துறை மந்திரி அப்துல் லத்தீப் ரோஷன், தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.அன்பழகன், விபா அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர் விஜய் பட்கார் உள்பட பலர் பேசினார்கள்.

உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் ஆகியோரும் விழாவில் கலந்துகொண்டனர். முடிவில் அறிவியல் பாரம்பரியம் மற்றும் ஆராய்ச்சி என்பது உள்ளிட்ட 2 புத்தகங்களை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் வெளியிட்டார். மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை செயலாளர் டாக்டர் ராஜீவன் நன்றி கூறினார்.

விழா முடிந்த பின்னர், மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு மாநிலங்கள் அமைத்து இருந்த அறிவியல் தொழில் நுட்ப கண்காட்சியை பார்வையிட்டார்.

இதேபோல் சர்வதேச அறிவியல் விழா சென்னை ஐ.ஐ.டி., மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய கடல் சார் தொழில் நுட்ப நிறுவனம், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகிய இடங்களிலும் நேற்று தொடங்கியது.

Next Story