கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக அரசுக்கு நன்றி- அபிராமி ராமநாதன்


கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக அரசுக்கு நன்றி- அபிராமி ராமநாதன்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 12:32 AM IST)
t-max-icont-min-icon

கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக அரசுக்கு நன்றி என்று தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் அளித்த பேட்டி வருமாறு:-

கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்ததற்காக அரசுக்கு நன்றி. டிக்கெட் கட்டணங்களை மாற்றியுள்ளதற்கும் நன்றி தெரிவிக்கிறோம். மக்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த முடியுமோ அதற்கேற்றபடிதான் தியேட்டர்களில் கட்டணங்களை வைத்திருப்போம். அதோடு படத்துக்கு தகுந்தபடி விண்ணப்பித்து கட்டணங்களை (குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச கட்டண வரம்புக்குள்) மாற்றிக்கொள்ளலாம் என்றும் கூறி உள்ளனர். சின்ன படங்கள் வரும்போது கட்டணங்களை சற்று குறைத்துக்கொள்வோம்.

தியேட்டர்களில் உணவு பொருட்கள் எல்லாமே அதிகபட்ச சில்லரை விலையில்தான் (எம்.ஆர்.பி.) விற்கப்படும். கூடுதல் விலையில் விற்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறி உள்ளது. எனவே வெளியில் ஒரு பொருளுக்கு என்ன விலையோ அதே கட்டணம்தான் தியேட்டருக்குள்ளும் வசூலிக்கப்படும். தியேட்டர்களில் வாகன நிறுத்த கட்டணம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எனவே அதுபற்றி நான் இப்போது கருத்து கூற இயலாது.

நாங்கள் கேட்ட கட்டணத்துக்கு அரசு ஒப்புதல் அளித்த பிறகு, நாங்கள் டிக்கெட் விலையை அதிகமாக வைக்க வேண்டியதில்லை. அரசு சார்பில் கடை வைத்தாலும் நாங்கள் இடம் கொடுப்போம். பாக்கெட் உணவுகள் அல்லாத, நாங்கள் தயாரிக்கும் மற்ற பொருட்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது எங்கள் உரிமை. அதிக விலை இருக்கும் தியேட்டர்களை நாங்களே திருத்திக்கொள்கிறோம்.

நடிகர்களின் சம்பளமும், தயாரிப்பு செலவும் அதிகமாக இருப்பதால்தான் டிக்கெட் கட்டணமும் உயர்ந்திருந்ததாக கூறலாம். ஆனால் இப்போது டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயித்துவிட்டது. பெரிய நடிகர்களின் படம் என்றாலும்கூட, அதை தாண்டி கட்டணம் வாங்கப்படாது. நாங்களும் கட்டுப்பாட்டோடு இருப்போம்.

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தியேட்டர்களை கண்காணிக்க குழு அமைத்துள்ளதாக கூறி உள்ளனர். அவர்கள் தாராளமாக வந்து எங்கள் தியேட்டரை கண்காணிக்கலாம். ஆன்லைன் டிக்கெட் விலை பற்றி கலந்துபேசி பின்னர் முடிவு எடுப்போம். மக்கள் வெளியில் இருந்து கொண்டுவரும் உணவை அனுமதிப்பீர்களா? போன்ற கேள்விகளுக்கு, திரையரங்குகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story