போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்


போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:00 AM IST (Updated: 14 Oct 2017 12:40 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகிறார்கள்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதி, கூட்டுறவு நிறுவனக்கடன், ஆயுள் காப்பீட்டுத்தொகை, அஞ்சலக காப்பீட்டு தொகை போன்றவைகளுக்காக தொழிலாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையினை அந்தந்த நிறுவனத்தில் செலுத்தாமல், நிர்வாக செலவுக்காக ரூ.6,500 கோடி தொழிலாளர்களின் பணத்தை நிர்வாகம் எடுத்து செலவு செய்துவிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்று நிர்வாகம் ஒவ்வொருமுறையும் கூறுகிறதே தவிர, அரசு வழங்க வேண்டிய டீசல் மானியத்தையும், இலவச பயணத்திட்டத்திற்காகவும், போதிய நிதியினை ஒதுக்காமலும், அத்துறை சிறப்பாக செயல்படுவதற்கு, நிர்வாகம் அரசிடம் போதுமான நிதியினை பெறுவதை விட்டுவிட்டு தொழிலாளர்களின் பணத்தை எடுத்துச் செலவு செய்வதை நிர்வாகச்சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும்போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நிர்வாகமும், அரசும், மனதில் வைத்துக்கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தங்களால் நிர்வாகம் செய்யமுடியவில்லை எனில், போக்குவரத்துக்கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்துவிட்டு பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் சேவை செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல் மின்வாரியத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களை பயன்படுத்தி வேலை வாங்கி கொத்தடிமைகளாக நடத்தி வருவதையும் அவர்கள் வேலை பார்க்கும்போது விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டால், அத்தொழிலாளியை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தும் இத்துறை நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறேன். “சம வேலைக்கு, சம ஊதியம்” என சட்டம் கொண்டுவந்தும், அதை நடைமுறைப்படுத்தாமல் இத்துறையில் 18 ஒப்பந்த பணியாளர்கள் தான் பணிபுரிகிறார்கள் என மின் வாரிய துறை செயலாளர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஒப்பந்த பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story