ஆந்திர மாநிலத்தில் இலவச காப்பீடு திட்டம்: மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும்
‘ஆந்திர மாநில அரசு மக்களிடம் பணம் எதுவும் பெறாமல் இலவசமாக காப்பீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது போல, தமிழக அரசும், மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து செயல்படுத்த முன்வர வேண்டும்’ என்று சென்னையில் நடந்த விழாவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
சென்னை,
ஏழ்மை நிலையில் பிறந்து, ஏழ்மையில் வளர்ந்து நாட்டுக்காக சேவை செய்து வரும் பிரதமர் நரேந்திரமோடி, ஏழ்மையை உணர்ந்ததால் முத்ரா கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஏழ்மையில் பிறந்தவர்கள் தன்மானத்துடன் வாழ்வதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார். முத்ரா திட்டம் தொடங்கப்பட்டு, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கடன் பெற்றவர்களில் 75 சதவீதம் பேர் பெண்கள்.
சிறு தொழில் முனைவோர் எளிதில் கடன் பெறுவதற்கான முத்ரா திட்டத்தில் கடனுதவி பெற உத்தரவாதம் எதுவும் கேட்கப்படுவதில்லை. செய்யும் தொழிலை நம்பியே கடன் வழங்கப்படுகிறது. இதன் பயன் முழுமையாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு சென்றடைய முத்ரா திட்ட முகாம்களை தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள் நடத்த வேண்டும்.அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கியமான தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடன் அளிக்க வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு படகுகள் வாங்கவும், சிவகாசியில் பட்டாசு தொழில் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பத்தமடை பாய் போன்ற பல்வேறு தொழில்கள் மேம்படவும் மாவட்ட வாரியாக கடன் வழங்கலாம்.
மத்திய அரசு திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதற்கான நிதியை ஒதுக்கினால் மட்டும் போதாது. திட்டம் வெற்றிபெற மக்களின் ஆதரவு வேண்டும். எனவே, முத்ரா திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்ல தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.
பிரதமர் அறிவித்த ஆயுள் காப்பீட்டு திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.330–ம், விபத்து காப்பீட்டுக்கு ரூ.12–ம் பெறப்படுகிறது. ஆனால், அந்த தொகையை செலுத்த முடியாதவர்களுக்கு பணம் ஏதும் பெறாமல் இலவசமாக காப்பீடு வழங்கும் திட்டத்தை ஆந்திர மாநில அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி, ஆந்திர மாநிலத்தில் மொத்த பிரீமியம் தொகையான ரூ.342ல், மத்திய அரசு ரூ.171–ம், மாநில அரசு ரூ.171–ம் வழங்குகிறது. எனவே, தமிழக அரசும் ஆந்திராவை போல மக்களிடம் பணம் பெறாமல் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து செயல்படுத்த முன்வர வேண்டும். இதன்மூலம் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு தொகை சென்று சேரும். இதன் மூலம் பலர் பயனடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் தமிழக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி இயக்குனர் பாஸ்கரன், மகளிர் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் பிரவீன் நாயர், வெங்கடேஷ்பாபு எம்.பி., நட்ராஜ் எம்.எல்.ஏ., தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் வரவேற்றார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தமிழக மேலாண்மை இயக்குனர் சுப்பிரமணியகுமார் நன்றி கூறினார்.
முன்னதாக சென்னை வந்த நிர்மலா சீதாராமனை விமான நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட பா.ஜனதா கட்சியினர் வரவேற்றனர்.