டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி இன்று சென்னை வருகை


டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை மந்திரி இன்று சென்னை வருகை
x
தினத்தந்தி 15 Oct 2017 3:15 AM IST (Updated: 15 Oct 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே இன்று சென்னை வருகிறார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை துணை–முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சந்தித்தார். அப்போது தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய மருத்துவ குழுவை அனுப்புமாறு கோரிக்கைவைத்தார்.

இதையடுத்து மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் தமிழகம் வந்தனர். அவர்கள் சென்னை, சேலம் உள்பட டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார்.

காலை 8.30 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளை பார்வையிட்டு நலம் விசாரிக்கிறார். பின்னர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளார்.


Next Story