தார் கொள்முதலில் அரசு அதிகாரிகள் ரூ.1,000 கோடி ஊழல்; ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு


தார் கொள்முதலில் அரசு அதிகாரிகள் ரூ.1,000 கோடி ஊழல்; ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு
x
தினத்தந்தி 15 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

சாலை அமைக்கும் பணியில் தார் கொள்முதல் செய்ததில், ஒப்பந்ததாரர்களுடன் கூட்டுசேர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரூ.1,000 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், ஜி.பாலாஜி என்ற சமூக ஆர்வலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள் அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி வரை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் பெருந்தொகை தார், இரும்பு மற்றும் சிமெண்ட் வாங்க செலவு செய்யப்படுகிறது. தற்போது கொள்முதல் விலையின் அடிப்படையில் தார் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

இதனால் மாதந்தோறும் தார் விலைகளில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் ஒப்பந்த பணிக்கு தார் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த பணி தொடங்கும்போது தார் விலை குறைந்துவிடுகிறது. ஆனால், பழைய விலை அடிப்படையில் ஒப்பந்த பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அரசிடம் பெருந்தொகையை பெறுகின்றனர்.

இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதன்மூலம் பல நூறு கோடி ரூபாயை அரசு அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுக்கொள்கின்றனர்.

உதாரணத்துக்கு 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு மெட்ரிக் டன் தார் ரூ.41 ஆயிரத்து 360 ஆக இருந்தது. இந்த விலையின் அடிப்படையில் 2014–15–ம் ஆண்டுக்கான சாலை பணிகள் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால் 2015–ம் ஆண்டு மார்ச் மாதம் ஒரு மெட்ரிக் டன் தார் ரூ.30 ஆயிரத்து 260 ஆக குறைந்துவிட்டது. ஒரு மெட்ரிக் டன் தாருக்கு சுமார் ரூ.11 ஆயிரம் குறைந்துள்ளது.

அதேபோல 2015–ம் ஆண்டு செப்டம்பர் தார் விலை ரூ.31 ஆயிரமாக இருந்தது. இதன் அடிப்படையில், 2015–16 ஆண்டுகளில் சாலை அமைக்கும் ஒப்பந்த பணி வழங்கப்பட்டது. ஆனால், 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் தார் விலை ரூ.23 ஆயிரத்து 146 ஆக குறைந்துவிட்டது. இவ்வாறு 2014–15 மற்றும் 2015–16 ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.800 முதல் ரூ.1,000 கோடி வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொகையை ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சுருட்டி விட்டனர். எனவே, இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்காக நேற்று பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் விசாரணைக்கு எடுப்பதற்குள் கோர்ட்டு நேரம் முடிந்துவிட்டதால், இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story