அமைச்சர் விஜயபாஸ்கர் நயவஞ்சகத்தின் மறு உருவம் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்


அமைச்சர் விஜயபாஸ்கர் நயவஞ்சகத்தின் மறு உருவம் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 15 Oct 2017 2:44 PM IST (Updated: 15 Oct 2017 2:44 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் விஜயபாஸ்கர் நயவஞ்சகத்தின் மறு உருவம் என முக ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.



சென்னை, 


தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே நடைபெறும் மேம்பால பணிகளை பார்வையிட்டார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பணிகளையும் ஆய்வு செய்தார்.  அதன் பிறகு டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடு வீடாக வழங்கினார். நிலவேம்பு கசாயத்தையும் பொது மக்களுக்கு வினியோகித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில்,
 
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி உயிர்பலி அதிகரித்து வருகிறது. இதில் மக்களை காப்பாற்ற அரசு போதிய முன்எச்சரிக்கையை எடுக்கவில்லை. டெங்கு காய்ச்சலால் சாவு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மறைக்க சாவு எண்ணிக்கையை குறைத்து பொய்யான தகவலை தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் மத்திய குழு பார்வையிட வர வேண்டிய அவசியம் இல்லை.
ஏனென்றால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது எய்ம்ஸ் மருத்துவ குழு எந்த மருத்துவ அறிக்கையையும் தரவில்லையோ அதே போல் இப்போது வந்துள்ள குழுவும் ஒரு வேஸ்ட் ஆன குழுதான். 

டெங்கு காய்ச்சலுக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பேட்டி கொடுத்து விட்டு செல்கிறார்கள். டெங்குக்கு 40 பேர்தான் இறந்திருக்கிறார்கள் என்று இறந்தவர்களை கொச்சை படுத்தி பேசுவது போல் பேசி விட்டு சென்றுள்ளனர். அது வன்மையாக கண்டிக்கத் தக்கது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்து வதை விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு விழா நடத்துகிறார். 5 அடிக்கு ஒரு பேனர் வைக்கிறார். 

டெங்குவால் மக்கள் பலியாவதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருக்கிறார். அவர் விஜயபாஸ்கர் இல்லை. ‘குட்கா’ பாஸ்கர். இப்போ ‘டெங்கு’ பாஸ்கரா மாறியிருக்கிறார். அவர் நயவஞ்சகத்தின் மறு உருவம். குட்கா விவகாரத்தில் விஜயபாஸ்கர் லஞ்சம் பெற்றார் என்று கூறிய தற்காக என் மீது வழக்கு தொடரப்போவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தார். இப்போது வரை அவர் என் மீது மான நஷ்ட வழக்கு தொடராமல் மவுனமாக இருப்பது ஏன்? குட்கா விவகாரத்தில் அவர் என் மீது மான நஷ்ட வழக்கு தொடர தயாரா? 
எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றது. நீண்ட நாள் இந்த ஆட்சி நிலைக்காது என்றார். 

Next Story