டெங்கு பாதிப்பு பற்றி மத்திய குழு ஆய்வு முடிந்தது: மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என அறிவிப்பு


டெங்கு பாதிப்பு பற்றி மத்திய குழு ஆய்வு முடிந்தது: மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 5:30 AM IST (Updated: 17 Oct 2017 12:09 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு பாதிப்பு பற்றி ஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து, அதுபற்றி மத்திய அரசிடம் அறிக்கையாக அளிக்கப்படும் என்று மத்திய குழு கூறியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பான பாதிப்புகள் அதிகம் இருந்ததால், அதனை பார்வையிட மத்திய அரசு அதிகாரிகளைக் கொண்ட குழு அனுப்பிவைக்கப்பட்டது. சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் இந்தக் குழுவினர் 13-ந் தேதி ஆலோசனை நடத்தினர்.

அன்றே சென்னை பகுதிகளை பார்வையிட்ட அவர்கள் 14-ந் தேதி செங்கல்பட்டு, சேலம் பகுதிகளுக்கு பிரிந்துசென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் புதுச்சேரியில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழு, நேற்று ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகத்துக்கு வந்தது.

அங்கு ஜெ.ராதாகிருஷ்ணனுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். பின்னர் மத்திய குழுவில் உள்ள கல்பனா பர்வா அளித்த பேட்டி வருமாறு:-

நாங்கள் ஆய்வு செய்தபோது சென்னை பகுதியில் பலருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. டெங்கு தடுப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை பரிசோதித்தோம்.

சென்னை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய இடங்களில் சிறு குழந்தைகளுக்கு கூட டெங்கு பற்றிய விழிப்புணர்வு உள்ளது. அது எப்படி பரவுகிறது என்பதை தெரிந்து வைத்துள்ளனர். தடுப்பு நடவடிக்கை பற்றி அவர்களுக்கு தெரிகிறதே தவிர, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அதை நடைமுறைப்படுத்தினால் தான் பயன் கிடைக்கும்.

தமிழக அரசு சார்பில் எங்களிடம் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதுதொடர்பாக டெல்லியில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். அதன்பின்னர் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

காய்ச்சலால் ஏற்படும் மரணத்தை தடுக்கும் முறை மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளோம். விரைவில் டெங்கு கட்டுப்படுத்தப்படும்.

மத்திய குழுவிடம் ரூ.256 கோடி மத்திய அரசு தரவேண்டும் என்று கோரியுள்ளோம். செவிலியர்களுக்கு தேவைப்படும் உதவிகள், கூடுதல் சிகிச்சை மையம் ஏற்படுத்துவது, கொசு ஒழிப்பு மருந்து வாங்குவது, 1,240 சுகாதார ஆய்வாளர்களை நியமிப்பது ஆகியவற்றுக்காக இந்த நிதி தேவைப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் ஏன் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மருத்துவ சிகிச்சைக்கு காலதாமதமாக வருவது, இறப்பு தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் பலியாகிவிட்டனர். 80 பேர் வகைப்படுத்தப்படாத காய்ச்சலுக்கு பலியாகிவிட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story