6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


6 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 5:15 AM IST (Updated: 17 Oct 2017 12:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் காலியாக உள்ள 6 ஆயிரம் காவல்துறை, தீயணைப்பு துறை பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 15 ஆயிரத்து 621 சீருடை பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. பணிநியமன ஆணைகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சட்டம் ஒழுங்கை பராமரித்தும், குற்றங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் ஸ்காட்லாந்து யார்ட் காவல்துறைக்கு இணையாக தமிழ்நாடு காவல்துறை விளங்கிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரித்தும், நல்லிணக்கத்தை நிலைநாட்டியும், தேசிய ஒருமைப்பாட்டை பேணிக்காத்தும், தீவிரவாதம் தலைதூக்காமல் இருக்கவும் தமிழ்நாடு காவல்துறையினர் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

இயற்கை பேரிடர் ஏற்படும் தருணங்களில் காவல் துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர், பிற துறையினருடன் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். சிறைத்துறையினரும் குற்றவாளிகளை நன்னடத்தை உடையவர்களாக மாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாடு காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காவலர்கள் இருக்கின்றனர்.

சீருடைப் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக தனி வாரியத்தை 1991-ம் ஆண்டு நவம்பரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கினார்.

கடந்த ஆண்டு வரை, ஒரு லட்சத்து இரண்டு ஆயிரத்து நானூற்று முப்பத்திரண்டு சீருடைப் பணியாளர்களை இத்தேர்வு வாரியம் தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த ஆண்டு நிதிநிலைக் கூட்டத்தொடரில் காவலர்கள் பணி நியமனம் குறித்து சட்டமன்றத்தில் நான் அறிவித்ததைத் தொடர்ந்து, மிகக்குறுகிய காலத்திலேயே 15 ஆயிரத்து 621 நபர்கள் பல்வேறு சீருடைப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில், ஆயுதப்படைக்கு 6 ஆயிரத்து 4 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 2 ஆயிரத்து 564 இரண்டாம் நிலை பெண் காவலர்களும், தமிழக சிறப்புக் காவல் படைக்கு 4 ஆயிரத்து 567 இரண்டாம் நிலை ஆண் காவலர்களும், 5 பெண் காவலர்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 140 இரண்டாம் நிலைக் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சிறைத்துறைக்கு 954 இரண்டாம் நிலை ஜெயில் வார்டர்களும், 36 இரண்டாம் நிலை பெண் ஜெயில் வார்டர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு ஆயிரத்து 491 தீயணைப்பு வீரர்கள் என மொத்தமாக 15 ஆயிரத்து 621 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து சரித்திரம் படைக்கும் வகையில் 4 திருநங்கைகளும் காவலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். இதன்மூலம் தமிழ்நாடு காவல்துறையில் காலி பணியிடங்களே இல்லை என்ற நிலை உருவாகும்.

தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்ற வாய்ப்பு பெற்றிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்வில் இது ஒரு பெருமைமிக்க தருணம் ஆகும். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அண்ணாவின் லட்சியத்தின்படி, தமிழ்நாடு காவல்துறையில் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பேணி, நமது காவல்துறையின் வரலாற்று பெருமையை நிலைநாட்ட வேண்டிய கடமை உணர்வோடும், நடுநிலையோடும், தன்னலமற்ற சேவையை தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் ஆற்ற வேண்டும்.

சீருடைப்பணியில் ஏராளமான சவால்களையும், பல்வேறு இடர்களையும் எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அல்லும்பகலும் அயராது உழைக்க வேண்டிவரும். “ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்” என்ற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விருப்பு, வெறுப்பின்றி பணியாற்ற வேண்டும். மக்களுடைய குறைகளை கனிவுடனும், கவனத்துடனும், பணிவுடனும், பரிவுடனும் கேட்டு, நடுநிலையுடனும், நேர்மையாகவும் பணிபுரிய வேண்டும். இதுதான் உங்களுடைய தலையாய கடமை.

இன்று முதல் பணியில் சேரும் ஒவ்வொரு காவலரும், கடமையுணர்வுடனும், துணிவுடனும், சமயோசிதமாக செயல்பட்டு, நாட்டில் அமைதி நிலவ பாடுபடவேண்டும்.

நேரம் காலம் கடந்து பல தருணங்களில் பாடுபட்டு உழைக்க வேண்டிய தன்னலமற்ற சேவைதான் காவல்பணி. ஆனால் அந்த உழைப்பால் மக்கள் பெரும் அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றை கண்முன்னே நிறுத்தி பார்க்கும்போது உங்களுக்குள் ஒரு பூரிப்பும், மிடுக்கும் நிச்சயம் ஏற்படும். ஒளிவு மறைவின்றி, நேர்மையான முறையில் தேர்வுகளை நடத்தியவர்களுக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி வரவேற்றார். பணி நியமனம் குறித்து விளக்கத்தை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் அளித்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல்துறை இயக்குனர் திரிபாதி நன்றி கூறினார். புதிய சீருடைப் பணியாளர்கள் 15 ஆயிரத்து 621 பேருக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கும் விதமாக அவர்களில் 46 பேருக்கு மேடையில் ஆணைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபா மோகன், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாட்சாயிணி ஆகிய மூன்றாம் பாலினத்தவரும் பணி ஆணைகளை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயிரம் புதிய சீருடைப் பணியாளர்களுக்கு அவர்கள் அமர்ந்திருந்த இடத்துக்குச் சென்று பணிநியமன ஆணைகளை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிரஞ்சன் மார்டி, டி.கே.ராஜேந்திரன் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக் கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட பல அமைச்சர்கள் பங்கேற்றனர்.

Next Story