தீபாவளியை ஆபத்து இல்லாமல் கொண்டாட பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்


தீபாவளியை ஆபத்து இல்லாமல் கொண்டாட பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
x
தினத்தந்தி 18 Oct 2017 5:45 AM IST (Updated: 18 Oct 2017 6:05 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டும் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு நடந்துள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூ.600 கோடிக்கு பட்டாசு வகைகள் விற்பனையாகி உள்ளது.

ஒவ்வொருவருக்கும் இந்த தீபாவளி தித்திக்கும் தீபாவளியாக அமைய வேண்டும் என்றால், பட்டாசுகளை வெடிக்கும்போது, பாதுகாப்பை கடைபிடிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தலைநகர் டெல்லியில் பட்டாசு விற்பனைக்கே சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்தில் அதுபோன்ற நிலைமை இல்லை என்றாலும், பாதுகாப்பு கருதி பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை மாநகர போலீசார், “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ பட்டாசு வெடிக்க கூடாது. குடிசைப்பகுதியில் ராக்கெட் வெடிக்க கூடாது. நடுரோட்டில் வைத்து பட்டாசு வெடிக்க கூடாது” என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

அதேபோல், தீயணைப்பு துறை சார்பிலும் விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

அதாவது, “பெரியவர்களின் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கவேண்டும். பட்டாசு வெடிக்கும்போது இறுக்கமான பருத்தி ஆடையை அணியவேண்டும். எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியிலோ அல்லது உலர்ந்த மண்ணிலோ போடவேண்டும். நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகள், ராக்கெட்டுகள், புஸ்வானம் போன்றவைகளை கைகளில் வைத்து வெடிக்க கூடாது. தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணியை அகற்றக்கூடாது. தீக்காயத்தின் மீது எண்ணெய் மற்றும் மை போன்றவற்றினை கொட்டக்கூடாது. பட்டாசு விற்பனை செய்யும் கடைகளுக்கு அருகிலோ, முன்னரோ பட்டாசு வெடிக்க கூடாது. பெட்ரோல் பங்க்குகளுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. மூடிய பெட்டிகளில் அல்லது பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளே போட்டு வெடிக்க கூடாது” என்று தீயணைப்பு துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, காவல் துறை சார்பிலும், தீயணைப்பு துறை சார்பிலும் கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 5,500 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் குடிசைப் பகுதிகள் அதிகம் உள்ள 100 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டங்களில் இருந்தும் 500 தீயணைப்பு வீரர்கள் சென்னை வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

பட்டாசு வெடிக்கும்போது, யாருக்காவது துரதிர்ஷ்டவசமாக தீக்காயம் ஏற்பட்டு விட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில், தீக்காய சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. அதில், 90 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேபோல், அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை ஆஸ்பத்திரிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளியையொட்டி சினிமா தியேட்டர்களில் 5 காட்சிகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story