குடிநீர்-மின்சார கட்டணங்களை செலுத்துவதில் குறுக்கிடுவது அழகல்ல அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, துரைமுருகன் கண்டனம்


குடிநீர்-மின்சார கட்டணங்களை செலுத்துவதில் குறுக்கிடுவது அழகல்ல அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, துரைமுருகன் கண்டனம்
x
தினத்தந்தி 18 Oct 2017 3:15 AM IST (Updated: 18 Oct 2017 1:18 AM IST)
t-max-icont-min-icon

“உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய குடிநீர்- மின்சார கட்டணங்களை செலுத்துவதில் குறுக்கிடுவது நல்ல நிர்வாகத்துக்கு அழகல்ல”, என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு, துரைமுருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவரும், தி.மு.க. முதன்மை செயலாளருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘14-வது மத்திய நிதி ஆணையத்தின் முதல் தவணை தொகையை மின்கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் போன்றவற்றிற்கு செலுத்த விடாமல் உள்ளாட்சி துறை அமைச்சர் குறுக்கீடு செய்கிறார். சம்பந்தப்பட்ட அரசு செயலாளர்கள் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்’, என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இதற்கு பதில் கொடுக்கிறேன் என்ற பெயரில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் எந்த இடத்திலும் ‘14-வது மத்திய நிதியாணையம் அளித்துள்ள முதல் தவணை தொகையில் நகராட்சிகளின் மின் கட்ட ணங்களும், குடிநீர் கட்டணங்களும் செலுத்தப்பட்டது’, தொடர் பான எந்த விளக்கமும் இல்லை. ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பது போலத்தான் இது உள்ளது.

சென்னை மாநகராட்சியிலிருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அனந்த குமாரும், நகராட்சி நிர்வாக கமிஷனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்திரகாந்த் காம்ளேவும், சில நாட்களுக்கு முன்பு வரை சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த அருண்ராய் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் எதற்காக உள்ளாட்சி துறை அமைச்சரால் மாற்றப்பட்டார்கள், எந்த ஊழலுக்கு இடமளிக்காததால் தூக்கியடிக்கப்பட்டார்கள்? என்பதெல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும் என்பதை அமைச்சர் வேலுமணி மறந்து விடக்கூடாது.

கோவை மாநகராட்சியில் இதுவரை நடைபெற்றுள்ள டெண்டர்களையும், அவை எந்த நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட்டால் முதலில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அமைச்சர் வேலுமணிக்குத்தான் வரும் என்பதை உணராமல் இப்படி அறிக்கை வெளியிட்டு தனது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

மாநிலத்தில் எங்கும் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணி முக்கியமானது. டெங்கு காய்ச்சல் என்றோ, டெங்கு காய்ச்சல் மரணம் என்றோ பதிவு செய்யக்கூடாது என்று தனியார் ஆஸ்பத்திரிகளை மிரட்டுவதை தவிர்த்து விட்டு, டெங்குவை தடுக்கும் பணிகளில் ஒவ்வொரு அமைச்சரும் ஈடுபடுவதுதான் மக்களுக்கு பயனளிக்கும். அதை விடுத்து உள்ளாட்சி அமைப்புகள் செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணங்களையும், மின்சார கட்டணங்களையும் செலுத்துவதில் குறுக்கீடுகள் செய்வது நல்ல நிர்வாகத்திற்கு அழகல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story