‘வர்த்தகமும், விவசாயமும் நாட்டின் இரு கண்கள்’ துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேச்சு


‘வர்த்தகமும், விவசாயமும் நாட்டின் இரு கண்கள்’ துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேச்சு
x
தினத்தந்தி 18 Oct 2017 5:00 AM IST (Updated: 18 Oct 2017 1:32 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திர வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வர்த்தகமும், விவசாயமும் நாட்டின் இரு கண்கள் என்று பேசினார்.

சென்னை,

ஆந்திர வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை தாங்கினார். இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், அப்பல்லோ மருத்துவக்குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி, ஆந்திர வர்த்தக சபையின் தலைவர் இந்திரா தத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வர்த்தக சபையின் 90-வது ஆண்டு விழாவையொட்டி விழா மலரை, துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வெளியிட, அதன் முதல் பிரதியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து வனிதா தத்லார், வந்தே மாதரம் சீனிவாஸ் ஆகியோருக்கு வெங்கையாநாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வழங்கினார்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு பேசியதாவது:-

பெற்ற தாய், பிறந்த இடம், தாய்மொழி, தாய் நாடு இவற்றை யாரும் மறக்க கூடாது. சாதி, மதம் மாறுபட்டு இருந்தாலும் நாம் எல்லாரும் இந்தியர்கள். நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ? அந்த ஊரின் கலசாரம், பழக்கவழக்கத்தை மதிக்க தெரிந்து இருக்க வேண்டும். வீட்டில் குழந்தைகளை பெற்றோர் தாய்மொழியை பேச கற்றுக்கொடுக்க வேண்டும். பிற மொழிகளையும் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும்.

நான் துணை ஜனாதிபதி ஆன பிறகு, எனக்கு நெறிமுறைகள் அதிகளவு வைக்கிறார்கள். எனக்கு இது புதிதாக இருக்கிறது. அதை பழகி கொண்டு இருக்கிறேன். இந்தியாவில் வர்த்தகம் தேவை. அது இல்லாமல் நாடு முன்னேறாது. அதேபோல் விவசாயத்தை நம்பி இருக்கிற நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதை வழி வழியாக பின்பற்றி வருகிறோம்.

வர்த்தகமும், விவசாயமும் நாட்டின் இரு கண்கள். தொழிற்சாலை மற்றும் விவசாயம் ஆகியவற்றின் வளர்ச்சி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு துணை நிற்கும்.

துணை ஜனாதிபதி ஆனதும் என்னிடம் சிலர் உங்கள் உடையை மாற்றவில்லையா? என்று கேட்டார்கள். அவர்களிடம் என்னுடைய முகவரி மட்டும் தான் மாறி இருக்கிறது. உடையை நான் எப்போது மாற்றமாட்டேன். இந்தியாவானாலும், ஜ.நா. சபையானாலும், உலக வங்கியானாலும் என்னுடைய உடை இது தான் என்று கூறினேன்.

பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவைவரி இந்த 2 நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் வளரும் என்று உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கணித்து இருக்கின்றன. வளர்ச்சி பாதையில் செல்லும் போது நேர்மையான கருத்துகளை ஏற்றுக்கொண்டு எதிர்மறையான கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story