பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


பாலாற்றில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Oct 2017 8:05 PM GMT (Updated: 17 Oct 2017 8:05 PM GMT)

பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்து, தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் அதன் பாசனப் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்கள் இன்னும் வறண்ட நிலையில் தான் காட்சியளிக்கின்றன. நீர் நிலைகளில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய நீர் வீணாக கடலில் சென்று கலக்கிறது. இந்த அவலங்களுக்கு காரணம் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படாததும், விலைமதிப்பற்ற இயற்கை வளமான பாலாற்று மணலை திராவிடக் கட்சிகளின் அரசுகள் போட்டிபோட்டுக் கொண்டு சுரண்டி கொள்ளையடித்ததும் தான்.

பாலாற்றின் குறுக்கே அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகளை கட்ட வேண்டுமென்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், மணல் கொள்ளையில் மட்டுமே கவனம் செலுத்திய தி.மு.க.-அ.தி.மு.க. அரசுகள் தடுப்பணை கட்டுவது பற்றி சிந்திக்கக்கூட இல்லை.

1892-ம் ஆண்டு பாலாறு நீர்ப்பகிர்வு ஒப்பந்தப்படி பாலாற்று நீரில் 50 சதவீதம் தமிழகத்திற்கும், ஆந்திரம் மற்றும் கர்நாடகத்திற்கு தலா 25 சதவீதமும் வழங்கப்பட வேண்டும். ஆனால், முதல்மடை பாசன மாநிலங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளைத் தடுக்க தவறியதால் தமிழகத்துக்கு தண்ணீரே கிடைக்காமல் போய்விட்டது. கிடைத்த தண்ணீரையும் தடுப்பணைகளைக் கட்டி சேமிக்க தமிழகம் தவறி விட்டது.

இந்த அவலநிலைக்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும். தங்களின் துரோகத்திற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமின்றி, பாலாற்றில் மணல் அள்ள தடை விதித்து, தடுப்பணைகளைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story