தீபாவளி பட்டாசு வெடிப்பில் சென்னையில் சவுகார்பேட்டையில் காற்று மாசு அதிகம்
சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியின் போது காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும், சவுகார்பேட்டையில்தான் காற்று மாசு அதிகம் என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை, நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வழக்கம்போல், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறி கொண்டாடினர். அதேபோல், தீபாவளி கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக, அனைத்து ஊர்களிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால், முந்தைய ஆண்டுகளை போல், அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது குறைந்தது; வானில் வர்ணஜாலம் காட்டும், வண்ண, பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் வெடிக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசுகள் வெடித்ததால் பல்வேறு பகுதிகளில் புகை மூட்டம் ஏற்பட்டது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாலையில் எதிரே வரும் வாகனங்கள், சரிவர தெரியாததால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்திற்காக சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் ஏற்பட்ட ஒலி மாசு குறித்த துல்லியமான அளவை இன்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், சென்னையில் வழக்கத்தை விட தீபாவளியின் போது காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையின் 5 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிகபட்சமாக 100 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய நுண்துகள் சவுகார்பேட்டையில் தான் 777 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருவல்லிக்கேணியில் 597-ம், நுங்கம்பாக்கத்தில் 541-ம், தி.நகரில் 529 மைக்ரோ கிராமும் நுண்துகள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டு தகவலில், சென்னை காற்றில் ஒரு கன மீட்டருக்கு 100 மைக்ரான் இருக்க வேண்டிய நுண்துகள் 158 ஆக இருந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தில் 158, மீனம்பாக்கத்தில் 123, தரமணியில் 127 என நுண்துகள் அளவு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காற்று மாசு அதிகரித்திருப்பது சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் எனவும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story