நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி


நமக்கு நாமே பயணத்தை மீண்டும் தொடங்க உள்ளேன் மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 21 Oct 2017 5:15 AM IST (Updated: 21 Oct 2017 1:24 AM IST)
t-max-icont-min-icon

நவம்பர் முதல் வாரத்தில் இருந்து நமக்கு நாமே பயணத்தை மீண்டும் மேற்கொள்ளப் போவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்த தீர்மானங்கள் வருமாறு:-

*டெங்குக் காய்ச்சல் எனும் நச்சுவலையில் சிக்குண்டு, சின்னஞ்சிறு குழந்தைகளும், மாணவ மாணவியரும், இளைஞரும், முதியோரும் அ.தி.மு.க. ஆட்சியில் கொத்துக் கொத்தாக மடிந்து மாய்வதை, மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் ஆழ்ந்த வருத்தத்துடனும், பெருங்கவலையுடனும் பதிவு செய்கிறது.

அதேநேரத்தில் எவ்விதப் பிரச்சினைகளாயினும், அதனால் மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அரசின் தாமதமான நடவடிக்கைக்காகச் சிறிதும் காத்திராமல், உடனடியாக மின்னல் வேகத்தில் களம் இறங்கி உதவும் கரம் நீட்டிய செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தொண்டர்களுக்கு இந்தக் கூட்டம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

தமிழகத்தில் மருத்துவ நெருக்கடி நிலைப்பிரகடனம் செய்து, மாநில அரசு கோரிய நிதியுதவியை அளித்து, டெங்குவில் இருந்து தமிழ் மக்களைக்காப்பாற்றும் வகையில், இதை ஒரு சுகாதாரப் பேரிடர் என்று கருதி மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

*திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிறைவு பெறும் இன்றைய சூழ்நிலையில், உன்னதமான ஒவ்வொரு உரிமையையும் தாரை வார்த்துவிட்டு இன்றைக்கு, பொம்மை அரசாக கற்பனைப் பெரும்பான்மையை உற்பத்தி செய்து கடுகளவும் வெட்கமின்றிப் பதவியில் நீடிக்கும் இந்தக் குதிரைபேர அரசு ஒரு நிமிடம்கூட ஆட்சியில் தொடருவதற்கு உரிய தார்மீகத்தையும், அரசியல்சட்ட ஜனநாயக உரிமையையும் முற்றிலுமாக இழந்து விட்டது என்று இந்தக் கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

*உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான டெண்டரில் 30 சதவீதம் வரை ஊழல், இயற்கை வளத்தைச்சூறையாடி ஒரு லட்சம் கோடி ரூபாய் தாது மணல் ஊழல், ஒரு லட்சம் கோடி ரூபாய் கிரானைட் ஊழல், ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் ஆற்று மணல் ஊழல், மருத்துவமனைகள் பராமரிப்பு மற்றும் மருந்து கொள்முதல் ஊழல், உடன்குடி மின் திட்ட ஊழல் என்று நிர்வாகக் கட்டமைப்பையே கெடுத்துக் குட்டிசுவாராக்கி, ஊழலில் புரையோடிப் போன அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் ஊழல் கிரிமினல் நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கை செய்கிறது.

*வாக்காளர் சேர்ப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை, கட்சி நிர்வாகிகள் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் தி.மு.க. வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடாமலும், அ.தி.மு.க.வினர் போலி வாக்காளர்கள் எவரையும் சேர்த்து விடாமலும் முன் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு மற்றும் சேர்ப்பு பணிகளில் மிக முக்கியமாக கவனம் செலுத்தி, தி.மு.க.வின் வாக்கு வங்கிகளாக திகழும் வாக்குச் சாவடிகளில் ஆளுங்கட்சியினர் முறைகேடுகள் செய்வதை ஆங்காங்கே உள்ள கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகள் மூலம் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டும் என்றும், குதிரைபேர அரசின் ஆயுட்காலம் எந்த நேரத்திலும் முடிவிற்கு வந்து, ஜனநாயக ரீதியிலான தேர்தலைச் சந்திக்க வேண்டிய நெருக்கமான கட்டத்தில் இருப்பதால், வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

*உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் அக்டோபர் 2016-ம் தேதியுடன் முடிந்து நிறைவு பெற்றுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு முன்வந்து, தேவையான முயற்சி எதையும் செய்யாமல் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறி முரண்பட்டு வருவதற்கு இந்தக் கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. ஏதாவது சாக்குபோக்கு சொல்லி மேலும் காலம் தாழ்த்தாமல், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட முன்வரவேண்டும் என்று இந்தக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் 11.30 மணிக்கு முடிவடைந்தது. கூட்டத்திற்கு பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது நமக்கு நாமே பயணத்தை தமிழகம் முழுவதும் நடத்தினோம். அதே போல் இப்போது ஒரு எழுச்சி பயணத்தை நடத்த உள்ளேன். அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரம் தொடங்கி, டிசம்பர் முதல் வாரத்தில் பயணத்தை நிறைவு செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்.

இது வெறும் பயணம் அல்ல. தேர்தலை மட்டும் கருத்தில் கொண்டு நடத்தப்படவில்லை. அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்காகவும் நடத்தப்படுகிறது. நமக்கு நாமே விழிப்புணர்வு பயண விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஏற்கனவே முந்தைய கவர்னர் வித்யாசாகர்ராவிடம் புகார் அளித்துள்ளோம். புதிய கவர்னரிடம் இப்போதைக்கு புகார் அளிக்கும் திட்டம் எதுவும் இல்லை. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே சட்ட ரீதியாகவும் எதையும் சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story