‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்


‘மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய ஜி.எஸ்.டி. வசனம் நீக்கமா? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2017 2:45 AM IST (Updated: 21 Oct 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா கட்சியினரின் எதிர்ப்பால் ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி. வரியை விமர்சித்து விஜய் பேசிய சர்ச்சை வசனத்தை நீக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. மருத்துவ துறையில் நடக்கும் தவறுகளை மையமாக வைத்து இந்த படம் வந்துள்ளது. விஜய் ஐந்து ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். வசூலிலும் இந்த படம் சாதனை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.32 கோடி வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த மெர்சல் படம், தலைப்பை எதிர்த்து வழக்கு, விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு, தணிக்கை சான்று வழங்குவதில் இழுபறி என்று பல்வேறு சர்ச்சைகள் மற்றும் தடைகளை கடந்தே திரைக்கு வந்தது. இப்போது படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. வரி பற்றிய வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அத்துடன் டாக்டர்களும் தங்களை அவதூறு செய்வது போன்ற காட்சிகள் வைத்து இருப்பதாக கண்டித்து வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா கட்சியினர் வற்புறுத்தி உள்ளனர். மருந்துக்கு 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளனர். ஆனால் தாய்மார்கள் தாலியை அறுக்கும் சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாதாம் என்றும், 7 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூரில் மக்களுக்கு இலவச மருத்துவம் தர்றாங்க. 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் இந்தியாவில் ஏன் இலவச மருத்துவம் தர முடியவில்லை என்றும் விஜய் பேசும் சர்ச்சைக்குரிய வசனங்கள் படத்தில் இடம்பெற்று உள்ளன.

இந்த வசனம் மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆட்சியை விமர்சிப்பதாக உள்ளது என்று அந்த கட்சியினர் எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் ஜி.எஸ்.டி. வசனங்கள்தான் படத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே, ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்கக்கூடாது என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.

படத்தின் டைரக்டர் அட்லியும் தணிக்கை குழு சான்று அளித்த படத்துக்கு காட்சிகளை நீக்கும்படி வற்புறுத்துவது முறையல்ல என்று கூறியிருக்கிறார். ஆனாலும் பா.ஜனதா எதிர்ப்பு காரணமாக ஜி.எஸ்.டி. வசனத்தை நீக்குவது குறித்து தயாரிப்பாளர் தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது சம்பந்தமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story