தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Oct 2017 1:59 AM IST (Updated: 21 Oct 2017 1:59 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியுள்ள டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தவித்து வரும் நிலையில், அடுத்ததாக பன்றிக் காய்ச்சலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

வழக்கம் போலவே, பன்றிக் காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினால் மக்கள் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் நோய் கண்காணிப்பு திட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள இதுதொடர்பான புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழ்நாட்டில் பன்றிக் காய்ச்சலுக்கு கடந்த 15-ந் தேதி வரை 3 ஆயிரத்து 244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக் காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.

பன்றிக் காய்ச்சல் நோய் அச்சுறுத்தும் அளவுக்கு இப்போது தீவிரம் அடையவில்லை என்றாலும் கூட, வெப்பநிலை குறையும் போது இது வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. டெங்கு காய்ச்சல் கொசு மூலம் பரவக் கூடியது என்றால், பன்றிக் காய்ச்சல் காற்றின் மூலம் பரவக்கூடியது ஆகும். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சல் மிகவும் தீவிரமாக பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

பன்றிக் காய்ச்சலை முன்கூட்டியே கண்டறிந்து முறையான சிகிச்சை அளித்தால் எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கு முன்பாக பன்றிக் காய்ச்சல் நோய் தமிழகத்தில் பரவுவதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு முறைகள், சிகிச்சைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story