தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 22 Oct 2017 3:15 AM IST (Updated: 22 Oct 2017 12:23 AM IST)
t-max-icont-min-icon

வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வட கிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில், வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஆனால் தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த சில நாட்களாக வெயில் வதைத்து வருகிறது.

இந்தநிலையில் வெயிலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தேவகோட்டையில் அதிகபட்சமாக 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூரில் 3 செ.மீ. மழையும், திருத்துறைப்பூண்டி, திருப்பத்தூர், திருவாரூர், பேச்சிப்பாறை, ஆத்தூர், திருமயம், காட்டுமன்னார் கோவிலில் தலா 2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இதேபோல மணப்பாறை, கீரனூர், செட்டிக்குளம், தக்கலை, திருவையாறு, நன்னிலம், தொழுதூர், ஜெயங்கொண்டம், குழித்துறையில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story