“மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார்” ‘இரட்டை இலை’ எங்களுக்கே கிடைக்கும்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி


“மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார்” ‘இரட்டை இலை’ எங்களுக்கே கிடைக்கும்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
x
தினத்தந்தி 22 Oct 2017 3:45 AM IST (Updated: 22 Oct 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

மோடியின் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

பெரியகுளம்,

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெருவில் அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 46-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம். 98 சதவீத கட்சி நிர்வாகிகள் நம்மிடம் உள்ளனர். யாராலும் நமது இயக்கத்தை அழிக்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி நமக்கு ஆதரவாக உள்ளார். எல்லாவற்றையும் மேலே உள்ளவர் பார்த்துக்கொள்வார். எனவே எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.

அந்த சின்னத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களை சந்தித்து வெற்றி பெறுவோம். இரட்டை இலை சின்னம் எங்கே இருக்கிறதோ அதுதான் உண்மையான அ.தி.மு.க.

நம்மை யாரும் மிரட்டவோ, அழிக்கவோ முடியாது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்கனவே ஜெயலலிதா கூறியபடி தமிழகத்தில் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவார்கள்.

அ.தி.மு.க. 46 வயது இளைஞர். தி.மு.க. 70 வயது முதியவர் போன்றது. அதனால் அ.தி.மு.க.வுடன் மோதினால் தி.மு.க. தவிடுபொடியாகிவிடும். தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்-அமைச்சராகும் யோகம் அவரது ராசியில் கிடையாது. முதலில் அவரது கட்சிக்கு கூட தலைவராக முடியவில்லை. இன்னும் செயல் தலைவராகத்தான் உள்ளார். நமக்கு நாமே திட்டம் தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார். அது பயனளிக்காது. எனவே எங்கள் ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது.

மு.க.ஸ்டாலின் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரச்சொல்கிறார். அதனை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே விரும்பவில்லை. மீறி ஓட்டெடுப்பு நடந்தால் தி.மு.க.வில் உள்ள 40 எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று தானும் ஆட்சிக்கு வரலாம் என்று கமல்ஹாசன் நினைக்கிறார். ஆனால் அது நடைபெறாது. கை தட்டுபவர்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story