இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை


இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் கமிஷன் இன்று இறுதி விசாரணை
x
தினத்தந்தி 23 Oct 2017 12:15 AM GMT (Updated: 22 Oct 2017 6:45 PM GMT)

இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது பற்றி முடிவு செய்ய தேர்தல் கமிஷனின் இறுதி விசாரணை டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.

சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. அன்று பிற் பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், இறுதி விசாரணையை 23-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று (திங்கட் கிழமை) நடைபெறுகிறது. விசாரணைக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு இரு அணியினருக்கும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

Next Story