ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் மு.க.ஸ்டாலின்


ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 23 Oct 2017 4:45 AM IST (Updated: 23 Oct 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 40 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொளத்தூர் தொகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் சிறப்பு முகாம்களை சட்டமன்ற உறுப்பினர் என்றமுறையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தேன். சென்னையில் மட்டும் இறந்து போன வாக்காளர்கள் 11,000 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக மாநில தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

அதேபோல, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 4.78 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

ஆனால், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய ஆர்.கே.நகர் தொகுதியில், அ.தி.மு.க.வின் சார்பில் 40,000க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ள விவரங்களை ஆதாரங்களோடு, தி.மு.க. சார்பில் தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால், இதுவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. எனவே, அந்த போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று நான் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல, வாக்காளர்களுக்கு 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா நடந்ததாக தெரிவிக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆவணங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏழு அல்லது எட்டு அமைச்சர்கள் பண வினியோகம் செய்ததாக இடம்பெற்று, அதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், அந்த தேர்தல் நிறுத்தப்படுவதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருப்பது வேதனைக்குரியது.

எந்த காரணத்தை முன்னிட்டு இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டதோ, அந்த காரணத்துக்கான தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறதா? அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா? இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது அதற்கான எப்.ஐ.ஆர். கூட போடப்படவில்லை. ஆகவே, அவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் நான் வலியுறுத்துகிறேன்.

பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் இன்றைக்கு, திரைப்படத்தின் வசனங்களை நீக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் சூழலைப் பார்க்கின்றபோது, பிறகு தணிக்கைக்குழு என்று ஒன்றே தேவையில்லையே என்பது தான் என்னுடைய கருத்து. மத்திய அரசே இன்றைக்கு தணிக்கைக்குழுவின் வேலையையும் பார்க்கத் தொடங்கி இருக்கின்றது. ஜி.எஸ்.டி. வரி பற்றி விமர்சனம் செய்வதைக் கூட அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அதே பா.ஜ.க.வினர் எதிர்க்கட்சியினரை எந்தளவுக்கு விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள்? அவர்களுடைய கொள்கைகள், திட்டங்களை பிறர் விமர்சனம் செய்தால் அவர்களால் தாங்க முடியவில்லை என்பதை பார்க்கின்றபோது, உள்ளபடியே அது கண்டனத்துக்குரியது.

டெங்கு காய்ச்சலை பொறுத்தவரையில் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகள் எடுத்து இருந்தால், நிச்சயம் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்பது என்னுடைய கருத்து. விரைவில் தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். இன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் அநியாய, அக்கிரம குதிரை பேர ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பது தான் அந்தப் பயணத்தின் நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story