தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாளில் தொடங்கும்


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாளில் தொடங்கும்
x
தினத்தந்தி 23 Oct 2017 3:30 AM IST (Updated: 23 Oct 2017 12:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை,

இந்தியாவில் தென் மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இருக்கும். வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையாகும். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் தென் மேற்கு பருவமழையை நம்பி உள்ளன. ஆனால் தமிழ்நாடு மட்டும் வடகிழக்கு பருவமழையை நம்பி இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு தென் மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழையின் போதுதான் அதிக மழை கிடைக்கும்.

கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பொய்த்து போனது. இந்த நிலையில் இந்த வருடம் தென் மேற்கு பருவ மழை இயல்பை விட கூடுதலாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில், அதாவது வருகிற 25 அல்லது 26-ந்தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதத்தில் இருந்து 111 சதவீதம்வரை இருக்கும் என்று அகில இந்திய வானிலை மையம் சமீபத்தில் அறிவித்துள்ளது. அதாவது இயல்பான அளவு பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்த நிலையில் வெப்பச்சலனம் காரணமாக 2 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்ய உள்ளது. இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறுகையில்; இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

போளூர் 10 செ.மீ, சிவகங்கை 8 செ.மீ., பேச்சிப்பாறை 7 செ.மீ., சத்திரப்பட்டி, திருக்காட்டுப்பள்ளி தலா 6 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், வல்லம், நாகப்பட்டினம் தலா 5 செ.மீ., பொள்ளாச்சி, நாமக்கல் தலா 4 செ.மீ., திருச்சுழி, குழித்துறை, மன்னார்குடி, வாடிப்பட்டி, சமயபுரம், ஆத்தூர், வேடச்சந்தூர், கீரனூர், மதுரை விமானநிலையம், செய்யாறு தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மழை பதிவாகி உள்ளது.

Next Story