‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்கக்கோரி போலீசில் புகார் பா.ஜனதா கட்சியினர் கொடுத்தனர்


‘மெர்சல்’ படத்தில் சர்ச்சை காட்சிகளை நீக்கக்கோரி போலீசில் புகார் பா.ஜனதா கட்சியினர் கொடுத்தனர்
x
தினத்தந்தி 22 Oct 2017 9:15 PM GMT (Updated: 22 Oct 2017 7:46 PM GMT)

‘மெர்சல்’ படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் பா.ஜனதா கட்சியினர் புகார் கொடுத்தனர்.

மயிலாடுதுறை,

விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. பற்றிய சர்ச்சைக்குரிய வசனத்துக்கு பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தில் மத்திய அரசை குறை கூறியிருப்பதாக விஜய்யை பா.ஜனதா கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மெர்சல் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

போலீசில் புகார்

இந்தநிலையில் பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடி கண்ணன் மற்றும் கட்சியினர் நேற்று மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர்.

அதில், “அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி உள்ளது. இந்த வரியின் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால், ஜி.எஸ்.டி.யை தவறான விதத்தில் சித்தரித்து விஜய் நடித்து வெளிவந்துள்ள மெர்சல் படத்தில் காட்சிகள் உள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, ஜி.எஸ்.டி. குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை மெர்சல் படத்தில் உடனே நீக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

தியேட்டரில் முற்றுகை

கோவில்பட்டியில் உள்ள ஒரு தியேட்டரில் மெர்சல் படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த தியேட்டரில் நேற்று காலை முதல் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அப்போது பா.ஜனதா கட்சியினர் கட்சி கொடிகளுடன் தியேட்டர் வளாகத்துக்குள் புகுந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறினர். அவர்கள் சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின்னர் கலைந்து சென்றனர்.

Next Story